Friday, March 2, 2012

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு டிஎஸ்பிக்கள் வீடுகளில் சோதனை!

Friday, March 02, 2012
சென்னை::முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு டிஎஸ்பிக்கள் 3 பேரின் வீடுகள் உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர்கள் பாண்டியன், வினோதகன், கணேசன். இவர்கள் 3 பேருமே காவலர்களாக பணியாற்றி, இப்போது டிஎஸ்பிக்களாக உள்ளனர். இவர்கள் 1998ம் ஆண்டு மார்ச் மாதம் முகப்பேர் ஏரி திட்டத்தில் 4780 சதுர அடி நிலம் ரூ.75 லட்சத்துக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் இடம் வாங்கினர். அந்த இடத்தை உடனடியாக கிரீன்வேஸ் சாலையில் வசிக்கும் கவுரி மற்றும் அவரது மகள் பத்மா ஆகியோரிடம் 3 பேரும் விற்பனை செய்தனர். 3 பேருக்கும் அடுத்தடுத்த இடம் என்பதால் கவுரி மற்றும் பத்மா ஆகியோர் வாங்கினர்.

இந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாக வீட்டு வசதி வாரியத்துக்கான பணத்தையும் ஒரே நாளில் கட்டினர். இது அரசு விதிமுறையை மீறியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு புகார்கள் வந்தன. ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர், எப்படி ரூ.75 லட்சத்தை ஒரே நாளில் கட்ட முடிந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஏடிஜிபி டி.கே.ராஜேந்திரன் டிஐஜி வெங்கட்ராமன், எஸ்பி துரைக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி சுப்பையா, டிஎஸ்பிக்கள் சோமசுந்தரம், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாண்டியன் வசிக்கும் மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பு மற்றும் கே.கே.நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment