Monday, March 26, 2012

அழுத்தங்களை குறைக்க அரசாங்கம் மியன்மாரை பின்பற்ற வேண்டும் - கலாநிதி தயான் ஜயதிலக்க!

Monday, March 26, 2012
இலங்கை::ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரேரணைக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்துள்ளதன் மூலம் அது உறுதிப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரேரணையால் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாதெனவும், இலங்கைக்கு சார்பானது எனவும் பலரும் தெரிவிப்பதாக பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டார்.

அவ்வாறாயினும், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், ஈக்குவடோர் போன்ற நாடுகள் இதற்கு எதிராக ஏன் வாக்களித்தன என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை போன்றதொரு நாட்டிற்கும், மனித உரிமைகள் பேரவைக்கும், சர்வதேசத்திற்கும் இதனால் பிரச்சினைகள் ஏற்படக் கூடாதென்ற காரணத்தினாலேயே குறித்த நாடுகள் இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை குறைப்பதற்கு அரசாங்கம், மியன்மாரை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் மியன்மார் மீது சர்வதேச நாடுகளால் பாரியளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை என தயான் ஜயதிலக்க கூறினார்.

உள்நாட்டு ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

இதனால் அழுத்தங்கள் பிரயோகித்த சர்வதேசம், மியன்மாருக்கு ஆதரவாக செயற்பட ஆரம்பித்தாகவும், இதனையே இலங்கை பின்பற்ற வேண்டும் எனவும் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment