Friday, March 23, 2012சென்னை::இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப் போரை நிறத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று சொல்லிவிட்டு இப்போது இலங்கைத் தமிழர்களை கொன்றதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க
வேண்டுமென்று கடிதம் எழுதுவதுதான் நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
23.3.2012 20-3-2012 தேதிய இதழ்களில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட நீண்ட அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் கூறியதை பற்றி, ஒரு மழுப்பலான பயனில்லாத ஒரு பதில் என்றும், கருணாநிதியின் நாடகத்திற்கு பிரதமரே துணை போகும் வகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அறிக்கை விடுத்த அதே ஜெயலலிதா மூன்றே நாட்களில் இன்று ஏடுகளில் விடுத்துள்ள அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீண்டதோர் அறிக்கை விடுத்துள்ளார்.
20ஆம் தேதி பிரதமரை வசை பாடியதும் இதே ஜெயலலிதா தான் - 23ஆம் தேதி பிரதமருக்கு நன்றி கூறியிருப்பதும் இதே ஜெயலலிதா தான். 20ஆம் தேதிய அறிக்கையில் 8-6-2011 அன்று இந்தப் பிரச்சினைக் காக தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தன்னால் தீர்மானம் முன் மொழியப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை மட்டுமா முன்மொழிந்தார்? 16-4-2002 அன்று இதே ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையிலே முன் மொழிந்த தீர்மானம் என்ன தெரியுமா? இலங்கை புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தையே அ.தி.மு.க. ஆட்சியிலே சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றி, புலிகள் தமிழகத்திலேயே நடமாடக் கூடாது என்று தடுப்பதற்கு முதன் முதலாக வழி வகுத்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டவர்களை யெல்லாம் பொடா சட்டத்திலே கைது செய்து சிறையிலே வைத்தப் பெருமைக்கும் உரியவர் தான் ஜெயலலிதா.
தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் தான் கடிதம் எழுதினேன், தான் தான் தீர்மானம் கொண்டு வந்தேன், தான் தான் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன் என்றெல்லாம் தற்புகழ்ச்சி பாடி அறிக்கை விட்டு ஏமாற்ற எண்ணுகிறார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துப் பற்றி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் அந்த அறிக்கையிலே என்னையும் இழுத்து; நான் நாடகம் போடுவதாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?
யார் போடுவது நாடகம்? இலங்கையிலே நடைபெற்ற இறுதிப் போரில் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது, 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலே என்ன சொன்னார்?
இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்;புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல் படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது. இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப் போரை நிறத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அதை யெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களைக் கொன்றதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று கடிதம் எழுதினால், அறிக்கை விடுத்தால் அதற்குப் பெயர் தானே நாடகம்?
No comments:
Post a Comment