Monday, March 26, 2012

பாதுகாப்பு, வர்த்தகத்தில் வலுவான உறவு: இந்தியா, தென்கொரியா உறுதி!

Monday, March 26, 2012
சியோல்::ராஜதந்திர விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், அரசியல், வர்த்தகத்தில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது என இந்தியாவும் தென்கொரியாவும் முடிவு செய்திருக்கின்றன.

2015-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தக மதிப்பை இரட்டிப்பாக்கி, ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்துவது எனவும் இருநாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன.

அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாடு: தென்கொரியாவில் திங்கள்கிழமை தொடங்கும் "அணுசக்திப் பாதுகாப்பு' உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சியோல் வந்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தென் கொரிய அதிபர் லீ மியூங்-பக் உடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தினார். வளர்ச்சி, விண்வெளி, கல்வி, விசா நடைமுறை, சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தினர்.

அப்போது மன்மோகன் சிங் கூறியது:

இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. புத்தரின் உன்னதமான தத்துவங்களை இரு நாட்டு மக்களும் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இப்போது நடந்த பேச்சின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்திருக்கிறோம்.

பாதுகாப்பு... இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, சியோலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரியை நியமிக்கும் இந்தியாவின் முடிவை தென் கொரிய அதிபரிடம் தெரிவித்திருக்கிறேன். இருதரப்பு ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

வர்த்தகம்... இரு ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட "விரிவான பொருளாதார உடன்பாடு' அமலுக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 65 சதவீதம் அதிகரித்திருக்கிறது. வலுவான பொருளாதார உறவுகள்தான் அதிகரித்துவரும் இருநாட்டு பரிவர்த்தனைகளுக்கு அடிப்படை என்பதை நானும் லீயும் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதனால் 2015-ம் ஆண்டுக்குள் இருநாட்டு வர்த்தக அளவை ரூ. 2 லட்சம் கோடியாக உயர்த்துவது என முடிவு செய்திருக்கிறோம்.

செயற்கைக்கோள்: இருநாட்டு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பான வழிமுறைகளை விவாதித்தோம்.

தென்கொரியாவின் செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஏவுவாகனங்கள் மூலம் விண்ணில் செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

போஸ்கோ திட்டம்: ரூ. 60 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒடிசாவில் தென்கொரியா நிர்மாணித்து வரும் "போஸ்கோ' திட்டத்தை விரைவாகத் தொடங்க அந்நாட்டிடம் இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனங்களுக்கு அழைப்பு: இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, நமது இலக்குகளை அடைவதற்கு கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும்.

எல்ஜி, சாம்சங் போன்ற கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் பெரும்பாலான வீடுகளை அடைந்துவிட்ட நிலையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

கூட்டறிக்கை: இரு தலைவர்களின் பேச்சுக்குப் பிறகு, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பெருகி வரும் பயங்கரவாதம், கடற்கொள்ளை போன்ற அச்சுறுதல்கள் குறித்து அந்த அறிக்கையில் இருநாடுகளும் கவலை தெரிவித்திருந்தன.

சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா.வின் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விசா நடைமுறை: பிரதமர் பயணத்தின் ஒருபகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையேயான விசா வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்குவது தொடர்பான உடன்பாடு ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது. வர்த்தகம் தொடர்பாக பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment