Tuesday, March 27, 2012

துமிந்த இருக்குமிடத்தை தெளிவுபடுத்தவும்; நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, March 27, 2012
இலங்கை::பாராளுமன்ற உறுப்பனர் துமிந்த சில்வாவை கைது செய்ய முடியாமற்போயுள்ளமை தொடர்பாகவும் அவர் தற்போது தங்கியுள்ள இடம் தொடர்பாகவும் எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது தெளிவுபடுத்த வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை இதுவரை கைதுசெய்ய முடியவில்லை என பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திரவின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி டிரந்த வலலியத்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

துமிந்த சில்வாவை கைதுசெய்வதற்கான சர்வதேச பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் அவ்வாறானதொரு உத்தரவினை பிறப்பிக்க முடியாதென கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவை கைதுசெய்ய முடியாதென பொலிஸார் கூறினால் மாத்திரமே அவ்வாறானதொரு பிடியாணையை பிறப்பிக்க முடியுமென கொழும்பு மேலதிக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment