Friday, March 30, 2012

ராமஜெயம் உடல் தகனம் ஸ்டாலின், அழகிரி அஞ்சலி:- கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை துப்பு துலங்குகிறது 5 தனிப்படை தீவிரம்!

Friday, March,30, 2012
திருச்சி::திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம் நேற்று மர்ம கும்பலால் காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், திமுக முன்னாள் அமைச்சர்கள் கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஐ. பெரியசாமி, செல்வராஜ், எம்எல்ஏ கே.சி. பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், பரணிக்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.க.தலைவர் கி.வீரமணி, கனிமொழி எம்.பி., மத்திய இணை அமைச்சர்கள் நெப்போலியன், காந்திசெல்வன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராமஜெயத்தின் உடல் தில்லைநகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தில்லைநகர், தெப்பக்குளம் வழியாக திருச்சி காவிரி கரையிலுள்ள ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.



கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை துப்பு துலங்குகிறது 5 தனிப்படை தீவிரம்!
திருச்சி::முன்னாள் அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொலையாளிகள் பற்றிய விவரம் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் (52), திருச்சியில் நேற்று படுகொலை செய்யப்பட்டார். தில்லை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு வாக்கிங் சென்றவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து, உடலை கல்லணை அருகே காவிரி ஆற்றின் ஓரம் புதருக்குள் வீசிவிட்டு சென்றனர். பின்னந்தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் மூச்சுவிட முடியாமல் திணறடித்து ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அவரை கடத்திய கார் திருச்சி நகரின் பல பகுதிகளில் சுற்றியுள்ளது. கொலையாளிகள், காரிலேயே அவரது வாயில் துணியை திணித்து செல்போன்களை பறித்துள்ளனர்.ராமஜெயம் கிரானைட் ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் தொழில்கள் செய்துவந்தார். பொறியியல் கல்லூரி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அரசியலிலும் நேருவுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டார். தொழில் ரீதியாக இவருக்கு போட்டிகள் இருந்தன. பலமுறை அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. அவற்றை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார்.

நேற்று அதிகாலை வாக்கிங் சென்றபோது 3 செல்போன்களை அவர் எடுத்துச் சென்றுள்ளார். வாக்கிங் செல்லும் பகுதி அதிகாலையில் பரபரப்பாக இருக்கும் என்பதால் அவரை அங்கு வைத்து யாரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியிருக்க முடியாது. காரில் இருந்தவர்கள் தங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் என கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது இவருக்கு தெரிந்தவர்கள் யாரும் காரில் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ராமஜெயத்தை கடத்தி கொலை செய்ததும், அவரது செல்போனில் இருந்தே வீட்டுக்கும், கல்லூரிக்கும் கொலையாளிகள் பேசி உள்ளனர். எனவே, செல்போன் மூலம் துப்பு போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பேசியபோது, கல்லூரியில் போனை எடுத்தவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். போனில் பேசியவர் குரல் எப்படி இருந்தது? சென்னை அல்லது நெல்லை தமிழில் பேசினாரா, வேறு மொழியில் பேசினாரா என விசாரித்தனர். ராமஜெயத்தின் மனைவி லதாவிடம் நாளை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராமஜெயம் அதிகாலை 5.15 முதல் 5.30 மணிக்குள் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் திருச்சி கே.டி. தியேட்டர் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் எத்தனை வாகனங்கள் கடந்து சென்றுள்ளன என போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 டெம்போ டிராவலரும், 11 கார்களும் கடந்தது தெரியவந்தது. அந்த வண்டிகளின் நம்பர்களை சேகரித்த போலீசார், அவை யாருக்கு சொந்தமானது, அந்த வாகனம் அதிகாலை வேளையில் அங்கு ஏன் வந்தது என விசாரித்து வருகின்றனர்.

அடுத்தகட்டமாக சடலம் கிடந்த திருவளர்ச்சோலை பகுதியில் இருந்து நேற்று காலை எத்தனை போன்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என ஒரு டீம் விசாரித்து வருகிறது. அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் 11 செல்போன்கள் பயன்படுத்தப்பட்டதும், 20 நிமிடம் அந்த போன்கள் உபயோகத்தில் இருந்ததும் தெரியவந்தது. எந்தெந்த எண்களில் இருந்து யார், யாருக்கு பேசி உள்ளனர் என செல்போன் நிறுவனங்களிடம் போலீசார் விசாரித்தனர். ராமஜெயத்தின் மனைவியை தொடர்பு கொண்ட நபரும் அங்கிருந்துதான் பேசியுள்ளார். கொலையாளிகள்தான் 11 போன்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அவற்றில் சில போன் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த போன் எண்களை வைத்து, கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ராமஜெயம் கொலையில் செல்போன் மூலம் துப்பு துலக்கி வருகிறோம். அதில் கொலையாளிகள் பற்றிய சில விவரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என்றார்.

No comments:

Post a Comment