Wednesday, March 28, 2012

» 2ம் இணைப்பு -மகாராஷ்டிரத்தில் நக்சலைட்டுகள் சாலையில் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் 12 பேர் பலி!

Wednesday,March,28,2012
கட்சிரோலி::மகாராஷ்டிரத்தில் நக்சலைட்டுகள் சாலையில் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 12 வீரர்கள் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 192-வது பட்டாலியனின் "டி' கம்பெனி பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள், பாதுகாப்புப் பணிக்காக மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்துக்கு பஸ்ஸில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். புஷ்தோலாவுக்கும் கட்டாவுக்கும் இடையே காலை 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நக்சலைட்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. சி.ஆர்.பி.எப். படையினரும், மகாராஷ்டிர நக்ஸல் எதிர்ப்புப் படையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது சி.ஆர்.பி.எப்.பின் தலைவர் கே.விஜயகுமார் கட்சிரோலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணிவெடி தாக்குதல் குறித்து மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங்கிடம் விஜயகுமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பேசிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல், ""சம்பவ இடத்துக்குச் சென்று சி.ஆர்.பி.எப். தலைவர் கே.விஜயகுமாரும், மகாராஷ்டிர நக்சல் எதிர்ப்புப் படை டி.ஐ.ஜி. வி.டி.மிஸ்ராவும் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா? உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரித்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.

காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 8 வீரர்கள் நாகபுரியில் உள்ள வாக்ஹார்ட் மருத்துவமனையிலும், 20 பேர் கட்சிரோலி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், சில வீரர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கு முன் உயிரிழந்தோர் எண்ணிக்கை:நக்ஸலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான விவரம்:

2005-ம் ஆண்டிலிருந்து 2010 மே மாதம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் வீரர்கள் உள்ளிட்ட 10,268 பொதுமக்கள் உயிரிழந்தனர். (2005-ம் ஆண்டு 1,952 பேர் உயிரிழந்தனர், 2006 - 1,999, 2007 - 1,737, 2008 - 1,769, 2009 - 2,372, 2010-ல் ஜனவரி முதல் மே வரை 439 பேர் உயிரிழந்தனர்.)

ஆந்திரம், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 83 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது.

2010 ஏப்ரல் 6-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 75 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கள்கிழமை சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நிகழ்ந்த மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment