Sunday, February 12, 2012

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு அடுத்த சிக்கல்:தொகுதி அதிகாரிகள், விழா குழுவினர் புலம்பல்!

Sunday, February 12, 2012
சென்னை::அ.தி.மு.க., - தே.மு.தி.க., உரசலால், தொகுதிகளில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கும் பட்சத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகள், விழாவை புறக்கணிக்கக் கூடும் என்பதால், விழாவுக்கு ஏற்பாடு செய்யும் குழுவினர், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்துக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. தே.மு.தி.க.,வுக்கு இனி இறங்கு முகம் தான் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர். இந்த பிரச்னையால், தற்போது, அ.தி.மு.க.,- தே.மு.தி.க., இடையே, விரிசல் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 28 பேரும், உள்ளாட்சி பிரதிநிதிகள், 849 பேரும் உள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், அ.தி.மு.க., பிரதிநிதிகளே அதிகம் உள்ளனர்.ஒவ்வொரு தொகுதியில், அரசு விழாக்கள் மற்றும் கோவில், பள்ளி, கல்லூரி விழாக்கள் நடக்கும். விழாவுக்கு, தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை நிர்வாகிகள், அதிகாரிகள் அழைப்பது வழக்கம். இதில், பெரும்பாலும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்ததால், ஆறு மாதமாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., தொகுதியில் நடந்த விழாக்களில், சிறிய அளவில் உரசல் இருந்த போதிலும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றாகவே பங்கேற்றனர். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., எதிரும் புதிருமாக இருப்பதால், விழா குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., தொகுதியை சேர்ந்த விழா குழுவினர் சிலர் கூறியதாவது:வழக்கமாக கல்லூரி, பள்ளி, கோவில் பண்டிகை, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆளுங்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்போம். ஆறு மாதம் நடந்த பெரும்பாலான விழாக்களில், அ.தி.மு.க.,- தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட, இரு கட்சியினரும் பங்கேற்றனர். எங்களுக்கும் பிரச்னை இல்லாமல் இருந்தது.தற்போது இரு கட்சியினரும், எதிரும் புதிருமாக இருப்பதால், "தே.மு.தி.க.,வினரை அழைத்தால், நாங்கள் பங்கேற்க மாட்டோம்' என, ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மறைமுகமாக தெரிவிக்கின்றனர். அழைக்காமல் இருந்தால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிப்பர். ஆளுங்கட்சி பிரதிநிதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால், இனி எங்கள் பாடு திண்டாட்டம் தான் என்றனர்.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., மோதலால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில், அரசு விழா, நலத் திட்ட உதவி வழங்கும் விழா உள்பட இதர விழாவுக்கு ஏற்பாடு செய்யும் குழுவினர், குழப்பத்தில் உள்ளனர். இது, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment