Thursday, February 9, 2012

பாரிமுனை பள்ளியில் இன்று பயங்கரம் : ஆசிரியை குத்தி கொலை

Thursday, February 09, 2012
தண்டையார்பேட்டை::வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். நன்றாக படிக்கச் சொல்லி ஆசிரியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த 9-ம் வகுப்பு மாணவன், இந்த வெறிச் செயலை செய்துள்ளான். பாரிமுனை பள்ளியில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இன்று காலை வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. பகல் 12 மணியளவில் ஆசிரியை உமா மகேஸ்வரி (30) என்பவர் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மாணவன் திடீரென எழுந்து ஆசிரியையை நோக்கி ஓடினான். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், உமாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினான். மார்பு, வயிற்றிலும் குத்தினான். நிலைகுலைந்த உமா, அலறினார். ரத்தம் சொட்டச் சொட்ட வகுப்பில் இருந்து வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பதறியடித்து ஓடிவந்தனர். உமாவை குத்திய மாணவன் அங்கிருந்து தப்பியோட முயன்றான். அவனை மற்ற மாணவர்கள் விரட்டினர். கத்தியை காட்டி அவர்களை மிரட்டிய மாணவன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஆனால், ஆசிரியர்களும் ஊழியர்களும் விரட்டிச் சென்று அவனை மடக்கிப் பிடித்தனர்.

உயிருக்கு போராடிய உமாவை சக ஆசிரியர்கள் மீட்டு, உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சட்டக் கல்லூரி காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். உமாவை கத்தியால் குத்திய மாணவன், வகுப்பில் பாடம் நடக்கும்போது கவனம் செலுத்தாமல் விளையாடிக் கொண்டிருப்பானாம். அவனை நன்றாக படிக்கும்படி உமா நேற்று கண்டித்துள்ளார். வீட்டு பாடம் கொடுத்து எழுதி வரச் சொல்லியிருக்கிறார்.

வீட்டுப்பாடம் எழுதாமல் இன்று பள்ளிக்கு வந்த அவனை உமா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், புத்தக பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாவை குத்திவிட்டான் என்று விசாரணையில் தெரியவந்தது. மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. தகவல் பரவியதும் ஏராளமான பெற்றோர் அலறியடித்து பள்ளிக்கு வந்தனர். தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வகுப்பறையிலேயே ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தது சென்னையில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment