Tuesday, February 07, 2012சென்னை::ரோந்து போன சிறப்பு எஸ்ஐயை தாக்கி மோதிரம், செல்போன் பறித்த போதை வாலிபர்கள் 4 பேர் போலீசில் சிக்கினர். நேற்று இரவு மெரினா பீச்சில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (58). அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக உள்ளார். நேற்று இரவு அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் எஸ்ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் மப்டியில் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். மெரினா நீச்சல் குளம் ஒட்டியுள்ள பகுதியில் முத்துராமலிங்கம் மட்டும் தனியாக சென்றார். அப்போது 5 பேர் கும்பல் மது குடித்துக் கொண்டிருந்தது.
எஸ்ஐ அவர்களை கண்டித்ததோடு, அந்த இடத்தை விட்டு போகும்படி கூறினார். பதிலுக்கு அந்த கும்பலை சேர்ந்த வாலிபர்கள், முத்துராமலிங்கத்திடம் வாக்குவாதம் செய்தனர். ஆத்திரம் அந்த வாலிபர்கள் எஸ்ஐயை தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரம், வாட்ச், செல்போனை பறித்து கொண்டு தப்பியோட முயன்றனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். எஸ்ஐயை தாக்கிய கும்பலை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டார். காயம் அடைந்த முத்துராமலிங்கத்தை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையத்தில் விசாரித்ததில், அவர்கள் மார்க்ஸ் (28), பாண்டியன் (21) செல்வம் (25) ரமேஷ் (38) என்றும், இதில் மார்க்ஸ் தி.நகர் பகுதியில் டிபன் கடை வைத்துள்ளார். மற்ற வாலிபர்கள் அதே டிபன் கடையில் வேலை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை தேடுகிறார்கள்.
No comments:
Post a Comment