Tuesday, February 28, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஜெ.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் : மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்!

Tuesday, February 28, 2012
சங்கரன்கோவில்::பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தினாலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என மமதையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேசினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை அறிமுகப்படுத்தி கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ரயில்வே பீடர் ரோடில் உள்ள வைஷ்ணவி மகாலில் இன்று நடந்தது. இதில் மு.க. அழகிரி பேசியதாவது: மின்தடையால் தமிழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பால் விலை, பஸ்கட்டணம் உயர்த்தினாலும், மின்தடையாலும் எந்த விதத்திலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என மமதையுடன் ஜெயலலிதா பேசியுள்ளார். அவரது மமதை பேச்சுக்கு பாடம் புகட்ட கட்சித் தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். கடந்த திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக்கூறினேனோ அதேபோல் வெற்றி பெற்றது. சங்கரன்கோவிலிலும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அழகிரி பேசினார். சர்வாதிகார ஆட்சி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது இல்லை. ஜெயலலிதா தவறுகளை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் தேர்தல். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை. ஆட்சிக்கு வந்தபிறகு சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று வாதாடி நல்ல தீர்ப்பை பெற்றோம். இதே போன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவும் தவறு என்று கோர்ட் சுட்டிக் காட்டியது. மக்கள்நல பணியாளர்கள் பணி நீக்கத்திற்கும் கோர்ட் தடை விதித்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடக்கவில்லை. கோர்ட் தீர்ப்புப்படி தான் ஆட்சி நடக்கிறது. இதை விட வெட்கக் கேடு எதுவும் இல்லை. சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் கூட சுதந்திரமாக பேச முடியவில்லை. ஆணவம், அகந்தையுடன் சவால்விட்டு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment