Monday, February 6, 2012

எழும்பூர் நீதிமன்றத்தில் தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது அவதூறு வழக்கு!

Monday, February 06, 2012
சென்னை::வன்னியர்களை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வக்கீல் பி.குமார், எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஜனவரி 29ம் தேதி வெளிவந்துள்ள தினமலர் நாளிதழிலும், தினமலர் இணையதளத்திலும் வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படி ஐடியா, கவுண்டர்களாக மாறி வரும் வன்னி யர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது.

அந்த செய்தியில் வாழ்வாதாரத்தை உயர்த்திய பின்னும் கவுண்டர் என்ற பெயரில் சமூகத்தில் வன்னியர்கள் வலம் வருகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக தங்களை வன்னியர் எனக் காட்டி கொண்டாலும் சமூகரீதியாக கவுண்டர் என காட்டி கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு என ஓட்டு வங்கி உள்ளது. வன்னியர்கள், பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்தி கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வன்னியர்களில் உள்ள பிரிவுகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்று பல்வேறு விஷயங்களையும் அந்த செய்தியில் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் வறுமை காரணமாக சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக சமூகத்தில் தங்களை மேம்படுத்தி கொண்டு வருகின்றனர். சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்தி கொண்டாலும் இன்றளவும் அவர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்) அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளது. அதன் காரணமாக வன்னியர்கள் என்றால் அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகள் வன்னியர் சமூக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், வன்னியர் சமூக மக்கள் சமூகத்தில் தவறான இனத்தவர் என்ற பொய்யான எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சமூகத்தை சேர்ந்தவனான நான், இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தியால் தமிழகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன் அனைத்து சமூகத்தினரிடம் பிரிவினையை ஏற்படுத்திவிடும்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற அவதூறு பரப்பும் செய்தியால் வன்னியர் சமூக மக்களுக்கு மற்ற சமூகத்தினரிடம் இருக்கும் மதிப்பு குறைந்துவிடும். சம்பந்தப்பட்ட சமூகத்தினர் எவரிடமும் எந்தவித விளக்கமும் கேட்காமல் இதுபோன்ற பொய்யான, உண்மைக்கு முரணான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அவதூறு பரப்பும் செய்தியை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் ஆர்.லட்சுமி பதி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (எ) (இனக் கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிடல்), 500, 501, 502, 503 (அவதூறு செய்தி வெளியிடல்), 504 (அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடல்), 505 (அவதூறு பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment