Friday, February 17, 2012இலங்கை::சோமாலிய கடற்கொள்ளையர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தப் விசேட படையணி: மேஜர் ஜெனரல் எக்கொடவெல:-
சோமாலிய கடற்கொள்ளையர்களின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த விசேட படையணியொன்று ஆழ்கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல்களுக்கு உரிய பாதுகாப்புகள் கிடைக்கும் என்று "ரக்ணா'' பாதுகாப்பு கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எக்கொடவெல தெரிவித்தார்.
உள்ளூரில் இயங்கும் அனைத்து தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் "ரக்ணா'' பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகள் பெற்றிருக்கவேண்டும். இல்லையென்றால் சேவைகளில் ஈடுபட முடியாது. இதற்கான விசேட சுற்று நிருபம் பாதுகாப்பு அமைச்சரால் சகல நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெலிவேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள "ரக்ணா'' பாதுகாப்பு கல்லூரியின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே மேஜர் ஜெனரல் எக்கொடவெல மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டில் புலிகளுக்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்படுகையில்,
"ரக்ணா'' என்ற படையணி வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி படையணி தற்போது ஆசிய வலய பாதுகாப்பிற்காக உபயோகிக்கப்படுகின்றது. குறிப்பாக சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேற்படி படையணி ஆழ்கடலில் செயற்படுகின்றது.
அதேபோன்று உள்நாட்டில் அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் "ரக்ணா' படையணி செயற்படுகின்றது. தனி நிறுவனமாக இயங்கும் மேற்படி பாதுகாப்புப் பிரிவு அரசிடமிருந்து எவ்வகையான நிதியினையும் பெற்றுக் கொள்வதில்லை. கடந்த வருடத்தில் மாத்திரம் 55 மில்லியன் ரூபாவை வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளது.
தனது நிர்வாகத்திற்கு தேவையான நிதியினை பாதுகாப்புக் கடமைகள் வழங்குவதன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு உள்நாட்டில் இயங்கும் அனைத்து தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் அனைவரும் "ரக்ணா'' பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறினார்.
No comments:
Post a Comment