Sunday, February 5, 2012

எமது மானத்தை விற்று அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையில்லை - திருகோணமலையில்(புலி)கூட்டமைப்பு சம்பந்தர் முழக்கம்!

Sunday, February 05, 2012
இலங்கை::எமது மானத்தை விற்று அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையில்லை - திருகோணமலையில்(புலி)கூட்டமைப்பு சம்பந்தர் முழக்கம்!

இலங்கையின் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உதவி தவிசாளர்கள் ஆகியோருக்கான பயிற்சிப் பட்டறை திருகோணமலையில் பெப்ரவரி 4 மற்றும் 5ஆம் திகதி ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. இதன் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், நாம் நிதானத்துடனும் விசுவாசத்துடனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றோம். ஆனால் எம்மீது புகார்கள் கூறப்படுகின்றன என்றார். அவரது முழுமையான உரை வருமாறு:

மக்களுடைய மிக முக்கியமான பலம் அவர்களின் ஜனநாயக பலம். மக்களின் ஜனநாயக பலத்தின் அடிப்படையில்தான் உலகில் எல்லா இடங்களிலும் ஆட்சிமுறை அமைகின்றது. அது மத்திய அரசாகவோ மாநில அரசாகவோ உள்ளூராட்சி மன்றங்களாகவோ இருக்கலாம். மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மக்களின் ஜனநாயக பலத்தை மக்கள் பாதிக்கப்படுகின்ற அடிப்படையின் மூலமாகத்தான் அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மக்களுடைய ஜனநாயகப் பலம் எங்கெங்கே மறுக்கப்படுகின்றதோ அம்மாதிரியான இடங்களில் தற்பொழுது ஆட்சியாளர்கள் மக்களின் புரட்சியின் மூலமாக மாற்றப்படுகின்றார்கள். இது நாங்கள் அறிந்த விடயம். வட-கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பை இந்நாட்டிலுள்ளவர்கள் மாத்திரமல்ல சர்வதேசரீதியாகக்கூட வல்லரசுகள், பிராந்திய அரசுகள், பலநாடுகள், பல நிறுவனங்கள், பல அமைப்புகள் மக்களை உண்மையாக விசுவாசமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளன. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ மக்கள் தங்களுடைய வாக்குகளை அவர்களது ஜனநாயகப் பலத்தை அந்தக் கட்சியின் சார்பாகப் பயன்படுத்தி அவர்களைத் தெரிவுசெய்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருக்க வேண்டியது எமது கடமை. அமெரிக்காவாக இருந்தால் என்ன? இந்தியாவாக இருந்தால் என்ன? ஐக்கிய இராச்சியமாக இருந்தால் என்ன? ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தால் என்ன? அவர்கள் அனைவரும் கூறுகின்ற கருத்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விசுவாசமாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணவேண்டும் என்பதாகும். இவ்வாறு அவர்கள் கூறுவதன் அர்த்தம் என்ன? வட-கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் தமது ஜனநாயக பலத்தின் மூலமாக தமது விசுவாசமிக்க பிரதிநிதிகளாகத் தமது சார்பாகப் பேசுவதற்கு தங்கள் சார்பாக அரசியலை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாம் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ள வேண்டியதும் அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியதும் அந்த நம்பிக்கையை மக்கள் எம்மீது தொடர்ந்து வைத்திருப்பதற்கும் நாங்கள் பெற்றிருக்கின்ற இந்த அந்தஸ்தைத் தொடர்ந்து பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்வதற்கு, எமது மக்களுடைய முடிவை மதித்து நடக்க வேண்டியது எமது கடமை. எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மற்றவர்கள் கடும் முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் எமது மக்கள் அவர்களுக்கு வாக்களிக்காமல் எமக்காக வாக்களித்ததற்கு என்ன காரணம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிரிவினையின் அடிப்படையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. துவேஷத்தின் அடிப்படையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆளும் கட்சியினர் செய்ததுபோன்று தேர்தலின்போது எதனையும் மக்களுக்கு வாரி அள்ளிக்கொடுக்கவில்லை. மாறாக எமது மக்களிடம், நாம் இந்த நாட்டில் ஏற்றம் பெற்ற ஓர் இனம். காலம்காலமாக நாங்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எமக்கோர் தனித்துவம் இருக்கின்றது. நாம் வட-கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எமது பிரதேசத்திற்கு மற்றவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் வட-கிழக்கினுடைய மொழிரீதியான கலாசாரரீதியான அடையாளங்களைப் பேணிப்பாதுக்காப்பதற்கு எமக்கு உரித்திருக்கின்றது என்று நாங்கள் நினைக்கின்றோம். இந்த அடிப்படையில் எமக்கு போதிய சுயாட்சி வழங்கப்படவேண்டும்.

நாட்டைப் பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் ஒருமித்த ஒரு நாட்டிற்குள் எமது மக்கள் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும்: அவர்கள் உரிமைகளைப் பெற்று, பாதுகாப்பாகவும்;, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும். அவற்றைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஆட்சி அதிகாரத்தை அவர்கள் அடைந்து, அ;தைப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு அதிகாரப் பகிர்வு இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டோம். அதற்காகத்தான் மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்தார்கள்.

நான் கூறிய இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்களுக்கு அந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை. மக்கள் அந்த அந்தஸ்தைப் பெறவேண்டும் என்று மிகவும் தீவிரமாக விரும்புகின்றார்கள்; இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது. எமது மக்கள் இந்த நாட்டில் சமஉரிமை பெற்று கௌரமிக்க பிரஜைகளாக வாழ விரும்புகின்றார்கள். இந்நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. அதற்காகத்தான் மக்கள் முக்கியமாகத் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். அதை நாங்கள் மறந்துவிடக்கூடாது.

அபிவிருத்தி முக்கியம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்திக்காக உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது, இதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாக இருந்தால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விசுவாசியல்ல. அவர் சுயநலத்திற்கு விசுவாசி. இன்று நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் ஒரு பக்குவமான நிதானமான அரசியல் தீர்வைப் பெற்று, எமது மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, எமது மக்களின் உரிமைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அந்த அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நடைபெறுகின்றன. நாங்கள் கேட்பது எங்களுக்கு உரிமையானது. இந்த நாட்டில் நாம் சமவுரிமையுடையவர்களாக இருந்தால் அந்த உரிமைகளை நாங்கள் பெறவேண்டும். அவை எமக்குத் தரப்படவேண்டும். அவைகள் எமது அடிப்படை உரிமை; எமது பிறப்புரிமை; அதை எவராலும் மறுக்க முடியாது.

நாங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் போகவில்லை என்று கூறுகின்றார்கள். நீங்கள் வரவேண்டும் என்று கூறுகின்றார்கள். ஏனெனில் தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரசன்னமாக இருக்காவிட்டால், அதில் காணப்படுகின்ற முடிவு பிரயோசனமற்ற முடிவாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். நாங்கள் வரவில்லை என்று நீங்கள் ஏன் இவ்வளவு வருந்துகின்றீர்கள்? எங்களை விட்டுப்போட்டு நீங்கள் நடத்தலாம். எங்களை விட்டுவிட்டு உங்களால் நடத்த முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் வந்தால் நீதி நியாயம் தருவீர்களா? கடந்த ஒருவருடகாலமாக நாங்கள் உங்களுடன் பேசியிருக்கின்றோம்? நாங்கள் நிதானமாக நடக்கவில்லையா? விசுவாசமாக நடக்கவில்லையா? அரசியல் தீர்வு என்பதை நாங்கள் தெளிவாகக் கூறவில்லையா? எழுத்தில் தரவில்லையா? நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை; நாம் எம்மக்களுக்கு உரித்தான மாநில மற்றும் மாவட்டங்களில் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் கேட்கின்றோம். கொடுத்தீர்களா? இந்த அடிப்படையில்தான் நாங்கள் பேசினோம். ஜனாதிபதிக்கும் எனக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நாங்கள் பேசினோம். எங்களுடைய பேச்சுவார்த்தையை நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம். இதை யாரும் மறுக்க முடியாது. பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்களும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரமாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நம்பிக்கை இருந்தாலோ இல்லாமல் இருந்தாலோ போகமாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அவர்கள் விசுவாசமாகப் பேசவேண்டும். ஒற்றுமையைக் காணக்கூடிய வகையில் பேசவேண்டும். பேச்சுக்குவா பேச்சுக்குவா என்று நெடுக அழைக்கின்றீர்கள். பேச்சுக்கு வந்தால் என்ன நடக்கின்றது? ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாங்கள் முழு உறுதியாய் இருக்கின்றோம். எமது மக்களைப் பொறுத்தவரையில் அது அத்தியாவசியமான தேவை. எமது மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார தேவைகளைப் பெறுவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு அரசியல் தீர்வு முக்கியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வருமாக இருந்தால், எமது அடிப்படை உரிமைகளை நாங்கள் பேணிப்பாதுகாக்கும் அதேசமயத்தில், மக்களுடைய தேவைகளைப் பொருத்தவரையில்கூட ஆக்கபூர்வமாக செயல்படக்கூடிய ஒருவழி பிறக்கும். ஏற்றமிகு அபிவிருத்தியில் நாங்கள் ஈடுபடலாம். மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவகையில் அபிவிருத்தியில் நாங்கள் ஈடுபடலாம்.. அந்தக் கடமையில் இருந்து நாங்கள் தவறமுடியாது. அவற்றை நிறைவேற்றுவதற்கு எமக்குப் போதிய வளங்கள் இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நியாயமான அளவிற்கு அபிவிருத்தியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். ஒரு அரசியல் தீர்வு ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக அதற்குரிய ஒழுங்குகளை சட்டபூர்வமாக நிறைவேற்றி அவர்களின் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பாரிய உதவிகளைச் செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். வெளிநாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் எமக்கு உதவிசெய்யும்.

எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் பிச்சைகேட்க வேண்டிய தேவையில்லை. எமது மானத்தை விற்று அபிவிருத்திக்கு நாங்கள் பிச்சை வாங்க முடியாது. இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது மானத்தை விற்காமல், எமது மக்களின் கௌரவத்தைப் பாதுகாத்து தேவைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகை இருக்கின்றது. அதை நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. நாம் எவருக்கும் சவால் விடவில்லை. எவரையும் நாம் அச்சுறுத்தவில்லை.

மிகவும் சிநேகபூர்வமான முறையில், நிதானமான முறையில், நியாயமான முறையில் இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசி ஒரு நியாயமான நிலைத்திருக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்குத்தான் நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் ஏமாற்றப்பட நாங்கள் தயாராக இல்லை. எமது தலைவர்களும் எமது மக்களும் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். யாராலும் ஏமாற்றப்படமுடியாது என்பது எங்களது உறுதியான நிலைப்பாடு.

ஒரு நியாயமான அரசியல் தீர்வு அத்தியாவசியம் என்று இன்று உலகம் முழுவதும் கூறுகின்றது. ஒரு நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஒரு நாட்டில் சகஜநிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஒரு நாட்டில் நிரந்தர சமத்துவம், சமாதானம் இருக்க வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு மூலமாகத்தான் அது ஏற்படவேண்டுமென்று உலகம் கூறுகின்றது.

நாங்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. வன்முறையின் காரணமாக எமது மக்கள்தான் கூடுதலாக இழப்பையும் துன்பங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். மீண்டும் அப்படியொருநிலை ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் எமக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். அது எமது உரிமை.

நான் இந்த வைபவத்தை ஒரு அரசியல் மேடையாகப் பயன்படுத்த விரும்பவில்லை. இருந்தபோதிலும்கூட, சில அடிப்படைக் கருத்துக்களைச் சொல்ல வேண்டியது எனது கடமையென்று நான் கருதுகின்றேன். நாம் மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் இருந்துகொண்டிருக்கின்றோம். எமக்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் அதனைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. சில கருமங்களை முறையாக நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தினால் ஒரு வாய்ப்பு ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டியது எம்முடைய பொறுப்பு. அரசாங்கமும் இதனை உணரவேண்டும். இதனை உணரும்படி அரசாங்கத்தை நாம் வினயமுடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

ஒரு நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டுமானால் அந்நாட்டில் வாழ்கின்ற பிரஜைகள் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்சரி சிங்களர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும். அவர்கள் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் உறுதி செய்யப்பட வேண்டும். அவை அரசியல் சாசனத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம்.

நாம் பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம். இனவாதக் கட்சிகள் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். அதே சமயத்தில் பல சந்தர்ப்பங்கள் உருவாகியபொழுது அந்தச் சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் அரசியல் தீர்வைக் காண்பதில் நாங்களும் சில தவறுகளைச் செய்திருக்கலாம் என்று கூறுவதற்கும் இடமிருக்கின்றது. அதை நாங்கள் மறுக்க முடியாது. இவை அனைத்தையும் உணர்ந்து எமக்கு ஒரு சந்தர்ப்பம் வருமாக இருந்தால், பிரயோசனமற்ற தீர்வை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. அதன் மூலம் எந்தவொரு விமோசனமும் வரப்போவதில்லை. ஆனால் எமது மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தீர்வு, அவர்களுடைய கௌரவத்தை, பாதுகாப்பை, உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தீர்வு அவர்களது சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு தீர்வு வருமாக இருந்தால், அத்தகைய வாய்ப்பு ஏற்படுமாக இருந்தால் அதை நாங்கள் விட்டுவிடக்கூடாது என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றும் நாளையும் நடைபெறுகின்ற இந்த உள்ளூராட்சி சபைகளின் தலைமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகப்

பயிற்சியில் நீங்கள் பங்குபற்றுவதையிட்டு நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இந்த விடயங்களில் போதிய அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் உங்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு எமது மக்களின் சார்பாக அந்த நிர்வாகங்களை நடத்தக்கூடிய வகையில் நீங்கள் அறிவுபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

எமது மக்கள் நீண்டகாலமாக பல கஷ;டங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கியவர்கள். எமது மக்களை இன்று சர்வதேச சமூகம் மதிக்கின்றது. நாங்கள் தமிழ் மக்களைப் பெரிதும் மதிக்கின்றோம் என்று நான் சந்திக்கின்ற பல இராஜதந்திரிகளும் கூறியிருக்கின்றார்கள். எமது மக்கள் சளைக்கக்கூடியவர்கள் அல்லர். எமது மக்கள் மிகவும் உறுதியான மக்கள் என்று கூறியிருக்கின்றார்கள். எம்மக்களைத் தூக்கிவிடவேண்டியது எமது கடமை. ஆதலால் இந்த பயிற்சி நிகழ்வில் நீங்கள் அறிய வேண்டிய எல்லா விடயங்களையும் அறிந்து, கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு, சந்தேகங்கள் இருந்தால் அவற்றைத் தீர்த்து எமது மக்களின் சார்பாகக் கடமைகளை ஆற்றுவதற்கு நீங்கள் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மக்களின் ஆதரவின் காரணமாக உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேசத்திலும்கூட தற்போது பெற்றிருக்கும் அந்தஸ்தை தொடர்ந்து பாதுகாத்து மக்களின் உரிமைகளை நாங்கள் பெறக்கூடிய வகையில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து செயற்படவேண்டும் என்று மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன். என்று கூறினார்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவஞானம் சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன், வினோநோகராதலிங்கம், எம்.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். வளவாளர்களாக ஓய்வுபெற்ற வடமாகாண செயலாளர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment