Monday, February 13, 2012

இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அவுஸ்திரேலியா விமர்சனம்!

Monday, February 13, 2012
அவுஸ்திரேலியா::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரபூர்வமான சில பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு அமைய அறிக்கை முழுமையடையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இன்று (13) அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இரு தரப்பினர் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கெவின் ரூட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிக்கை முழுமையாக வெளியிடப்படாததால் இலங்கையிடம் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்த வேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை ஆக்கபூர்வமாக செயற்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும் என கெவின் ரூட் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்த கெவின் ரூட்டின் கருத்தை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

மேலும் சில வாரங்களில் கூடவுள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இது விடயம் தொடர்பில் கெவின் ரூட் நிலையான முடிவு ஒன்றை எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் வருணி பாலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment