

Friday, February 10, 2012இலங்கை::மேற்கு ஆபிரிக்க நாடான டோஹோ நாட்டிலுள்ள "லுமி" நகருக்கு சட்டவிரோத பயண ஏற்பாடுகளினால் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் அவர்கள் தங்கவைக்கப்பட்ட வீடுகளிலும் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளதாக நாடு திரும்பியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கனடாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டு டோஹோ நகரில் நிர்க்கதியான நிலையில் தற்போது அந்நாட்டு முகாமொன்றில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இரண்டாவது தொகுதியினராக 28 பேர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ளனர். இந்த 28 பேரில் 14 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்.
டோஹோ நாட்டிலுள்ள "லுமி" நகரில் ஐந்து வீடுகளில் தங்கவைக்கப்பட்ட எங்களை பராமரிக்கும் பொறுப்பை முகவருடைய உறவினர்கள் ஏற்றிருந்தார்கள். அவர்களிடம் உணவுக்காக பிரதான முகவரினால் பணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை எங்களிடம் தரவில்லை. நாம் அடிப்படை வசதிகளின்றி கஷ்ரப்பட அவர்கள் சொகுசு வாழ்கை வாழ்ந்தார்கள். தொலைபேசியில் தொடர்பு கொள்ள மறுக்கப்பட்டது. அப்படி தொடர்பு கொள்வதென்றால் அவர்களால் ஓட்டுக் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த தொலைபேசி தொடர்பு கூட மலேசியாவிலிருந்து இணைப்பு ஏற்பாடு செய்யப்படும். இதுவும் ஒருமுறைதான் வசதி செய்யப்படும்.
நாங்கள் தங்கவைக்கப்பட்ட இடங்களில் முகவருடைய ஆட்களும் தங்கிருந்தார்கள் அவர்களுக்கிடையில் இடம்பெறும் உரையாடலின் போது மேற்கு ஆபிரிக்காவில் ஹானா உட்பட இன்னும் ஓரிரு நாடுகளில் ஆட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக ஹானா நாட்டில் சுமார் 400 பேர் இருக்கிறார்கள்.
நாங்கள் தங்கியிருந்த டோஹோவில் எங்களது முகவரை விட ஏனைய இரு முகவரின் ஆட்களும் பல வீடுகளில் இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இப்படி தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு உட்பட பலவகையில் கஷ்டப்பட்டுவருவதாக என்னால் அறிய முடிகிறது. அது மட்டுமின்றி வீசா முடிவடைந்த நிலையில் வெளியே செல்ல முடியாது வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
நாங்களும் இப்படித்தான் அங்கு வைக்கப்பட்டோம். இந்த சட்டவிரோத பயண ஏற்பாட்டாளர்களால் குறித்த வீடுகளில் நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என்பதை விட அடைத்து வைக்கப்பட்டோம் என்றுதான என்னைப் பொறுத்தவரை கூற முடியும். இப்படி இன்னும் பலர் அந்த நாட்டில் உள்ளார்கள். இதனை எமது நாட்டில் உள்ளவர்கள் அறியவேண்டும்.
இப்படி தங்க வைக்கப்பட்டிருந்த வேளை நவம்பர் மாதம் 20ஆம் திகதி நாங்கள் தங்க வைக்கப்பட்ட இடம் என்பதை விட முகவரினால் தடுத்து வைக்கப்பட்ட இடம் இந்நாட்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம். அதற்கு முதல் நாள் அங்கு தங்கியிருந்த முகவரின் ஆட்கள் எங்களின் பணத்தை பெற்று சென்றுவிட்டனர். அதன் பின்புதான் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம். இதனை நோக்கும் போது இது ஒரு திட்டமிட்ட செயல் என்று கருதுகிறோம். அப்படியிருந்தும் முகவரின் ஆட்கள் எனக் கூறப்படும் சிலரும் எம்முடன் கைதானார்கள்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமதிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது முகவர்கள் உறவினர்களும் அங்கு காணப்பட்டார்கள். அங்கிருந்தும் எமது வெளித்தொடர்பை தடுக்க முற்பட்டனர். இராணுவத்தினாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இடம் ஒரு மைதானம் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் பராமரிக்கப்பட்டோம். எங்களை நன்றாகப் பராமரித்தார்கள்.
உணவு தேனீர் போன்றன உரிய நேரங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானத்தில் நுளம்பு வலைக் கூடாரங்களில் பொதுவாக ஆண்கள் தங்கினோம். பெண்களும் குழந்தைகளும் விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த நாட்டைச் சேர்ந்த இராணுவமோ அதிகாரிகளோ எங்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. வறிய நாடாக இருந்தாலும் நாங்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டோம். தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எமது சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைகள் இல்லை. இராணுவ வீரர்களின் கண்காணிப்பில் வெளி நடமாட்டத்திற்கு ஆரம்பத்தில் அனுமதியளிக்கப்பட்டது. முகவரின் ஆட்கள் என கருதப்பட்ட நான்கு பேர் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தலைமறைவானதையடுத்து அந்த அனுமதி கூட இப்போ மறுக்கப்பட்டுள்ளது.
209 பேரில் முதற்கட்டமாக 9 பேர் கடந்த மாதம் சர்வதேச புலம்பெயர்தோர் அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பினார்கள். இரண்டாவது தொகுதியாக நான் உட்பட மூன்று பெண்கள் அடங்கலாக 28 பேர் நாடு திரும்பியுள்ளளோம். இவர்களில் கணவன் மனைவி�� மற்றும் தாய் மகள் என மூன்று பெண்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
நாட்டுக்கு திரும்புமாறு எந்த தரப்பிலிருந்தும் எம் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை சுயமாகவே நாடு திரும்பினோம். சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு நாடு திரும்ப விரும்பினால் ஏற்பாடு செய்து தர முடியும் என்றுதான் தெரிவித்தது. இந்த அடிப்படையில் அனேகமானோர் நாடு திரும்பும் வகையில் தற்போது வைத்திய பரிசோதனை முடித்துள்ளார்கள். சிலர் ஏதோவொரு காரணத்தினால் நாடுதிரும்ப விரும்பாமல் அந்த நாட்டில் தங்க விரும்புகிறார்கள் இன்னும் சிலர் ஏதோவொரு நாட்டிலாவது அகதி அந்தஸ்து வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். தற்போது அந்த தடுப்பு முகாமில் 16 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட 168 பேர் தொடந்தும் உள்ளனர்.
எனது பயணத்திற்காக 25 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டது. முதற் தொகையாக நகைகளை அடவு வைத்தும் கடன்பட்டும் மூன்று இலட்சம் ரூபா செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக இலங்கையை விட்டு வெளியேற முன்பு தடுப்பு ஊசி போடுவதற்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலுத்தப்பட்டது மேலும் டோஹோ சென்ற பின்பு எம்மிடமிருந்த மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான டொலர் நாணயத்தைப் பெற்றுக் கொண்டனர். இப்போ பயணம் கைகூட வில்லை ஏமாற்றப்பட்ட நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் இழந்து நிர்க்கதியாகி நாடு திரும்பியுள்ளேன். மீண்டும் பழைய தொழிலில் இணைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளளேன்.
நாடு திரும்பிய பின்பு விமான நிலையத்தில் எவ்வித கெடுபிடிகளும் இருக்கவில்லை. குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டார்கள். இப்படியான பயணங்கள் செய்யவேண்டாம் என அறிவுரைகளை வழங்கினார்கள்" என்றார்.
No comments:
Post a Comment