Friday, February 10, 2012

காஞ்சி அருகே பஸ்சுக்காக காத்திருந்தபோது விபரீதம் மணல் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் பரிதாப சாவு!

Friday, February 10, 2012
காஞ்சிபுரம்::பஸ்சுக்காக காத்திருந்தபோது, சாலையில் மணல் லாரி கவிழ்ந்ததில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் அருகே இன்று காலை நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து மணல் லாரி ஒன்று சென்னை&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. காலை 6.30 மணியளவில் காஞ்சிபுரம் அருகே திருப்புகுழி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது மோதாமல் இருக்க மணல் லாரி டிரைவர் இடது புறம் திருப்பினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி, பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. லாரி இருந்த மணலும் கொட்டியது. லாரியின் அடியில் சிக்கி காஞ்சிபுரம் அருகே முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்த சிவகாமி (30), நீலாவதி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த செல்வி (30), பச்சையம்மாள் (39), ஞானம்மாள் (43), அமுதா (28), அன்னம்மாள் (40), மற்றொரு செல்வி (40), லட்சுமி (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வயல் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆவர். இதை அறிந்ததும் திருப்புகுழி, பாலுசெட்டி சத்திரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலைக்கு திரண்டு வந்தனர்.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் டிஎஸ்பி ராஜேந்திரன், பாலுசெட்டி சத்திரம் இன்ஸ்பெக்டர் சிவபாதசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்த பெண்களை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லாரி டிரைவர் ராமனை (40) போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment