Wednesday,February,08,2012கோவை::திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இதயத்துல்லா, நாராயண மூர்த்தி, ராமானுஜம் ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 2 1/2 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை கோவையில் அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கோவை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கோவை சி.பி.சி.ஐ.டி., ஓ.சி.ஐ. பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக வந்து செல்லும் கோவை பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக நோட்டமிட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 2 வட மாநில வாலிபர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் சிறு சிறு கட்டுகளாக கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
உடனடியாக அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த லால் முகம்மது (45), முகம்மது சிபிக் (25) என்பது தெரிய வந்தது. அவர்களது பையில் இருந்து ரூ. 29 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.
அந்த நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை.அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தொடர்ந்து விசாரித்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவிற்குள் லட்சக் கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட திட்ட மிட்டுள்ளனர். அதன்படி பாகிஸ்தான் - இந்தியா எல்லைப் பகுதியான மேற்கு வங்க மாநிலம் மால்டி மாவட்ட பகுதிக்குள் கள்ள நோட்டுகள் கட்டுக் கட்டாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தை கடத்தல் தொழில் செய்வோர் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் மூலம் இந்தியாவில் புழக்கத்தில் விட்டு வருகின்றனர். அந்த வகையில் லால் முகமது, முகமது சிபிக் ஆகியோரிடம் குறிப்பிட்ட அளவு கள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். அவர்கள் ரெயில் மூலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோவை வந்து உள்ளனர். இங்கிருந்து திருப்பூர் சென்று அங்குள்ள லாட்ஜூகளில் தங்கி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
நேற்று கள்ள நோட்டு கும்பல் போலீசில் பிடிபட்டதால் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து திருப்பூரில் இருந்து கோவை திரும்பி உள்ளனர். கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த போது போலீஸ் பிடியில் சிக்கி கொண்டனர். இவர்கள் கோவை வருவதற்கு முன்பு வேறு சில மாநிலங்களுக்கு சென்று கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். மீதமிருந்த கள்ள நோட்டுகளை தமிழகத்திற்குள் புழக்கத்தில் விடும் நோக்கத்தில் அவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் திட்டப்படி திருப்பூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தற்போது ரூ 27 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கள்ள நோட்டு பரிமாற்றத்தின் மூலம் இந்த பணம் இவர்களுக்கு கிடைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment