Thursday, February 2, 2012

தமிழக சட்டசபையில் மோதல் சம்பவம்: விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்டு!

Thursday, February 02, 2012
சென்னை::தமிழக சட்டசபையில் நேற்று தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட முறை பற்றி சட்டமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் டி.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வினர் மீது கூறப்பட்ட அவை மீறல் குறித்து நிலைக்குழுவின் அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்படும் என்றார். இதற்கு தே.மு.தி.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் துணை சபாநாயகரும், உரிமைக்குழு தலைவருமான எஸ். தனபால் ஒரு அறிக்கையை வாசித்தார்.

அதில் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய முடிவு நேரம் இன்மை காரணமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான 3 தட்டச்சு பிரதிகள் சட்டமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் உரிமை குழு எடுத்த முடிவின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார்.

உடனே பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.) குறுக்கிட்டு அவையில் ஒரு முடிவை வைத்தாலே அதை விவாதிக்கும் உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு.

சபாநாயகர்: நிலைக்குழுவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அங்கு விவாதித்துதான் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்றார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானத்தை வாசித்தார். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவை மீறல் குறித்து உரிமைக்குழு எடுத்துள்ள முடிவை இந்த சட்டமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றார்கள். தே.மு.தி.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூ, இந்திய கம்யூ, ஆகிய கட்சிகளும் தீர்ப்பின் மீது தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதன் பிறகு சட்டசபையில் சபாநாயகர் தீர்ப்பை வாசித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

இன்று பேரவை முன்னவர் கொண்டு வந்து, அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த சட்டமன்ற கூட்டத்திலும், அடுத்த சட்டமன்ற கூட்டத்திலும் இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் வரை அவை நடவடிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார். இக்காலத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் வழங்கப்பட்டுள்ள எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும் சலுகைகளையும், தகுதிகளையும் பெற முடியாது.

1.2.2012 அன்று அவைக்கு வந்திருந்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை, உரிமையை வருங்காலங்களில் முறைகேடாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென்ற உத்தரவாதத்துடன் அவர்களை மன்னித்து, இனி பேரவையின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காப்பதற்கு உறுதுணையாக இருந்து, இதுபோன்ற சூழ்நிலை திரும்பவும் எழாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேற்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையுடன் அவர்கள் மீதான உரிமை மீறல் பிரச்சினை இத்துடன் விட்டு விடப்படுகிறது. இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தே.மு.தி.க.வினர் வெளிநடப்பு செய்வதாக கூறினர். அவர்கள் வெளியேறும்போது அரசுக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பிச் சென்றனர். அவர்களை சபாநாயகர் சபையைவிட்டு வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதற்குள் தே.மு.தி.க.வினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

அதன் பிறகு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு, கட்சியினர் தங்களுக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்கள். விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வரவில்லை.

பதவியை துறக்க நாங்கள் தயார்.. ஜெ தயாரா : விஜயகாந்த்!

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் முதல்வர் ஜெயலலிதா மீதும், அதிமுக மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுத்தார். இதில் தேமுதிகவின் அனைத்தும் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயார்.. அதே போல் அதிமுகவினர்கள் ராஜினாமா செய்ய தயாரா என முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரடி சவால் விடுத்தார். இதனையடுத்து அதிமுக தேமுதிக கூட்டணி தவிடுபொடியானது.

மேலும் தனது பேட்டியில் தேமுதிக தனித்துப் போட்டியிட ஒருபோதும் யாருக்கு அஞ்சாது என்று விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'ஆளும் கட்சி மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுப்பது, அவர்களது பயத்தை காட்டுகிறது. தேமுதிகவிற்கு இறங்குமுகம் தான் கூறிய ஜெயலலிதாவிற்கு தான் இனி இறங்குமுகம்' என்று விஜயகாந்த் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தன்னை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது எனக் கூறிய முதல்வருக்கு, உங்களை பார்த்தால்(ஜெ) கூட தான் எனக்கு அருவருப்பாக இருக்கிறது என காட்டமாக பேசினார்.

No comments:

Post a Comment