Thursday, January 5, 2012

மூன்று விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

Thursday,January 05, 2012
இலங்கை::கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அல்பிட்டிய - குருந்துகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அல்பிட்டிய வைத்தியசாலைக்குச் சொந்தமான லொறி ஒன்றில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபர் பாதசாரிகள் கடவையில் கடக்கும்போதே லொரியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கும்புருபிட்டிய - ஹொரபுருவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியின் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பஸ்யால பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment