Wednesday, January 4, 2012

சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடங்கியது!

Wednesday,January,04,2012
சென்னை: சென்னையில் சுற்றுலா பொருள்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருள்காட்சி ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மழை மற்றும் `தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருள்காட்சி அரங்கம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு நேற்று 3.1.2012 பொருள்காட்சி தொடங்கியது.

பொருள்காட்சியில் மத்திய, மாநில அரசுத்துறைகள், நிறுவனங்களின் 40 அரங்குகளும், தனியார் கடைகளும் இடம் பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களை மகிழ்விக்கும் வகையில், 40 பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு கூடார அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருள்கள், துணிக்கடைகள், அழகு சாதன பொருள்கள் நிறைந்த கடைகள், துரித உணவக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொருள்காட்சியை தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு மகிழலாம்.

விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தினமும் சிறப்பு குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் டிக்கெட் உரியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஊட்டி மலை ரயில், தாஜ்மஹால் உள்பட இந்தியாவில் உள்ள சுற்றுலா இடங்களின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தது.

மேலும் தமிழக அரசின் ஒவ்வொரு துறையையும் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் அண்ணா கலையரங்கத்தில் இரவு 7 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாடு ஓட்டல் சார்பாக தமிழகத்தின் தலைசிறந்த பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளது. பொருள் காட்சி 70 நாள்கள் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment