Tuesday, January 3, 2012

கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததோடு அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிரிப்பு வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒருவகை பதற்றம் நீடித்ததாகவும் அந்த சமயத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

ஆனமடுவ பகுதியிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

ஆனமடுவ, சங்கச்சிக்குளம் பிரதேசத்தில் இருந்து சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர் துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புத்தளத்தைச் சேர்ந்த 49 வயதான மொஹமட் நிஸ்தார் என்பவர் நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாத சிலரினால் வேனொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஆணமடுவ, சங்கச்சிக்குளம் பகுதியில் சடலத்தை வீசிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் மற்றும் ஆணமடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment