Tuesday, January 03, 2012 12கோவை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவை மாவட்ட 20வது மாநாடு கவுண்டம்பாளையத்தில் 3 நாள் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் நிறைவுரையாற்றினார். 41 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவினர், 24 பேர் கொண்ட மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாலையில், செம்படை பேரணி நடந்தது. பின்னர் நடந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: முல்லை பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது மட்டுமே தீர்வாக அமையும். முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142அடி உயர்த்த வேண்டும் என்பதை கேரள அரசு ஏற்கவேண்டும். அணை உயரத்தை குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்து விட்டது. இரு மாநில மக்களிடையே பகை உணர்ச்சியை தூண்டு விடுவதில் கட்சிகள் ஈடுபடக்கூடாது.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின்னர் பால்விலை உயர்த்தப்பட்டது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மின் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. மக்கள் விரோதத்தை சம்பாதித்து வரும் அதிமுக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் போராடும். தமிழகத்தில் மற்ற மதசார்பற்ற கட்சிகளை இணைத்து இந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மாத இறுதியில் நாகபட்டினத்தில் நடக்கும் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழக மக்கள் நலன் காக்கும் போராட்டம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.
No comments:
Post a Comment