Wednesday, January 4, 2012

பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் தொடர்புடைய முத்திரைகள் புழக்கத்தில்:பிரெஞ்ச் தூதுவரிடம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடும் தொனியில் விசனம்!

Wednesday,January,04,2012
இலங்கை::பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய படங்களையும் இலட்சினைகளையும் அந்நாடு முத்திரைகளாக வெளியிட்டிருப்பதை இலங்கை கண்டித்துள்ளது.கொழும்பில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொனை தூதரகத்தில் சந்தித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் கண்டனத்தை நேற்றுத் தெரிவித்தார்.

இந்த முத்திரைகளை பிரெஞ்ச் அரசாங்கம் நேரடியாக வெளியிடாவிட்டாலும் புழக்கத்தில் இருந்து முத்திரைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டு மென்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரெஞ்ச் தூதுவரிடம் கேட்டுக் கொண்டார்.

இவ்விதம் எல்.ரீ.ரீ.ஈ.யை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த முத்திரைகளை வெளியிடுவதற்கு பிரெஞ்ச் அரசாங்கம் அனுமதித்திருப்பது உலக பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் கையாளும் பொறுப்பற்ற கொள்கையை எடுத்துக்காட்டுகிறது என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தூதுவரிடம் கண்டனம் தெரி வித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமக்கு நம்பிக்கை இருக்கிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற பயங்கரவாத அமைப்புகள் நாடுகளிடையே இருந்துவரும் நட்புறவை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள அரசாங்கங்களுடன் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக பலதரப்பட்ட தொடர்புகளை வைத்து இலங்கை பற்றிய தப்பபிப்பிராயத்தை அந்நாடுகளில் ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றனரென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கத்திய நாடுகள் எங்கள் நாட்டு நலனில் நம்பிக்கை வைத்து செயற்படுகின்றன என்ற உணர்வை இலங்கையில் மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அந்நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கூறினார். இன்று பயங்கரவாத குழுக்கள் மாற்று வழிகளில் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்த எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் முத்திரைகளை உடனடியாக பிரான்ஸில் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

பிரான்ஸில் உள்ள ஒரு நிறுவனம் அதற்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இந்த முத்திரைகளை வெளியிட்டிருக்கிறதென்று கொழும்பில் உள்ள பிரெஞ்ச் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரான்ஸில் 360 முத்திரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்று பிரெஞ்ச் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விதம், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மறைமுகமாக பயங்கரவாதத்திற்காக நிதி சேர்ப்பதனையும் பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment