Wednesday, January 4, 2012

புயலால் பாதிக்கப்பட்ட புதுவை-கடலூருக்கு தி.மு.க. சார்பில் ரூ. 50 லட்சம் உதவி: கருணாநிதி அறிவிப்பு!

Wednesday,January,04,2012
புதுச்சேரி::புயலால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் கடலூர் மாவட்டத்தை பார்வையிட தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி இன்று சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மரக்காணம், அனுமந்தை, கோட்டக்குப்பம் பகுதியில் புயல் சேதத்தை பார்வையிட்டார்.

காலை 10 மணிக்கு புதுவை எல்லையான கனகசெட்டிக்குளத்துக்கு வந்த அவருக்கு புதுவை தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுவை அண்ணாமலை ஓட்டலுக்கு வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூரை பார்வையிட சென்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புயல் தாக்கிய பகுதிகளில் பாதிப்பு எப்படி உள்ளது? நிவாரண பணிகள் எப்படி நடக்கின்றன? என்பதை பார்வையிடுவதற்காக நான் வந்துள்ளேன். இந்த பணிகளை பார்த்த பிறகு தான் நான் எனது கருத்துக்களை கூற முடியும். தற்போது மாநில பதவியில் இல்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்குவது தொடர்பாக என்னால் எதுவும் சொல்ல முடியாது.

ஆனாலும் எங்களது மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் மூலமாக மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வற்புறுத்துவோம். தமிழகம், புதுவையில் தானே புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். 10 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர், 10 ஆயிரம் ஹெக்டேர் கரும்பு மற்றும் 1000க்கான தென்னை, வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

150 மின்மாற்றிகள் சேதம் அடைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவி உரிய நேரத்தில் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அப்போது தான் அது பயன் அளிப்பதாக இருக்கும்.கடலூர் மற்றும் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கடலூர் புறப்பட்டு சென்றார். ரெட்டிச்சாவடி எல்லையில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக பகுதியான கங்கனாங் குப்பத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்த்தார். அடுத்து அவர் கடலூருக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கடலூர் பகுதிகளில் புயல் சேதத்தை பார்வையிட்டார். பின்னர் சிதம்பரம் வழியாக திருவாரூருக்கு சென்றார்.

No comments:

Post a Comment