Friday, January 27, 2012சென்னை::ரயில்வே காவல் நிலைய காவலர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும், சென்னை துரித ரயில் போக்குவரத்துக்கென்று இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப்படாததையும் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, அதன் வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை, விபத்து மற்றும் குற்றங்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள 19 காவல் நிலையங்களை மறு வகைப்பாடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் 2 பெருநகர்-1 வகை காவல் நிலையங்கள், 3 பெருநகர்-2 வகை காவல் நிலையங்கள், 4 உயர்வகை காவல் நிலையங்கள், 5 நடுத்தர வகை காவல் நி¬யைங்கள் மற்றும் 5 சிறிய வகை காவல் நிலையங்கள் என 19 சென்னை மாவட்ட ரயில்வே காவல் நிலையங்களை மறுவகைப் படுத்தவும், இந்த காவல் நிலையங்களில் பணிபுரிய கூடுதலாக 10 ஆய்வாளர்கள், 45 சார் ஆய்வாளர்கள், 55 தலைமை காவலர்கள், 134 காவலர் கிரேடு 1, 200 காவலர் கிரேடு 2 ஆகிய 444 கூடுதல் பணியிடங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 11 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 200 ரூபாய் செலவு ஏற்படும். தவிர குளித்தலை தாலுகா, சத்தியமங்கலம் கிராமத்தில், போக்குவரத்து துறைக்கு சொந்தமான இடத்தில் 73 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் செலவில் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரம்-திருக்கடையூரில் சுற்றுலா ஓய்வு இல்லம்: ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில், புத்தன்தருவாய் கிராமத்தில் சொக்கன் குடியிருப்பில் உள்ள மணல் மாதா திருத்தலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக, இத் திருத்தலப் பகுதியில் பயணிகளின் வாகனம் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைப்பதற்காக 15 லட்சம் ரூபாயும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்காக 4 லட்சம் ரூபாயும், காத்திருப்போர் கூடம் அமைப்பதற்காக 5 லட்சம் ரூபாயும், குடிநீர் வசதி செய்து தருவதற்காக 1 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, இந்தியாவின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும், ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கும், தனுஷ் கோடிக்கும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை புரிவதைக் கருத்தில் கொண்டு இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு சுற்றுலா ஓய்வு இல்லம் கட்டுவதற்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள பிரசித்திப்பெற்ற அபிராமி அம்மன்- அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு, 60 வயது நிறைவு மற்றும் 80 வயது நிறைவினை ஒட்டி பல்வேறு பக்தர்கள் தங்கள் உறவினர்களுடன், பூஜைகள் செய்வதற்காக அதிக அளவில் வருகைத் தருவதால் அவர்களின் வசதிக்காக சுற்றுலா ஒய்வு இல்லம் கட்டுவதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சுற்றுலாப்பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment