Tuesday, January 31, 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி பறிப்பு மேன்முறையீடு பெப்ரவரி 30ம் திகதி பரிசீலனைக்கு!

Tuesday, January 31, 2012
இலங்கை::தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீடு எதிர்வரும் பெப்ரவரி 30ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரண்டாம் இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இன்று (31) குறிப்பிட்டுள்ளார்.

இதனை பரிசீலித்த சஞ்சித் டி சில்வா, நலின் பெரேரா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு, உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இதன்படி, பெப்ரவரி 30ம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் மனுவை விவாதிப்பதற்கு திகதி குறிக்கப்படும் என நீதிபதிகள் குழு அறிவித்தது.

இரண்டாம் இராணுவ நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை அடுத்து பாராளுமன்ற செயலாளர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தமை சட்டவிரோதமானதென அறிவிக்கும்படிக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment