Friday, December 30, 2011

வட மாவட்டங்கள், புதுச்சேரியில் பலமான சூறைக்காற்று ‘தானே’ புயல் தாக்குமா?

Friday, December,30, 2011
சென்னை : வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை ‘தானே‘ புயல் தாக்குமா என்ற உச்சகட்ட நிலை நெருங்கி விட்டது. சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த புயல் இன்று காலை கரை கடக்கும். இந்த தீவிரப்புயல் சென்னைக்கு 180 கிமீ தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. பின் மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. இதனால் நாகப்பட்டினம்&புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்கும். கரையைக் கடக்கும் போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், இயல்பான கடல் அலைகளைவிட 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் அளவு உயரம் அலைகள் எழும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையை கடக்கும் வரை தரைக் காற்று மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் வீசும். கடலோரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வட தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் 250 மி.மீட்டருக்கு அதிகமாகவும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிசை வீடுகள் பாதிப்பு, பயிர் சேதம் இருக்கும். மின்சாரம், தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படும். நெல், மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். கடலில் இருந்து சில இடங்களில் கடல் நீர் புகும் வாய்ப்பும் உள்ளது. புயல் கரையை கடக்கும்வரை மழை தொடரும். இதையடுத்து புதுச்சேரி, கடலூர் துறைமுகத்தில் அதிகபட்ச புயல் எச்சரிக்கை கூண்டு எண் 10 ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் கூண்டும், நாகப்பட்டினத்தில் 8ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

வட மாவட்டங்களில் 250 கடலோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார், தீயணைப்பு படையினர், உள்ளாட்சி ஊழியர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அளவில் பள்ளிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தானே புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் சேதத்தில் இருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புயலின் தீவிரம் எப்படி?

தேதி காற்றின்வேகம் தீவிரம்
(கிமீ/மணிக்கு) நிலை
28ம் தேதி 90&110 தீவிர புயல் காற்று
29ம் தேதிகாலை 130&155 மிகதீவிரமான புயல் காற்று
29ம்தேதி மாலை 130&155 மிகதீவிர புயல் காற்று
29ம்தேதிஇரவு 120&145 மிகதீவிர புயல் காற்று 30ம்தேதிமதியம் 80&100 புயல் காற்று
30ம்தேதி இரவு 65&75 புயல் காற்று
31ம் தேதி காலை 45&55 ஆழ்ந்த காற்றழுத்தம்
31ம் தேதி இரவு 30&50 குறைந்த காற்றழுத்தம்


‘ஜல்’லை முறியடிக்குமா ‘தானே?’

கடந்த ஆண்டு உருவான ‘ஜல்’ புயலை பார்க்கும் போது, மேல் அடுக்கில் காற்று முறிவு அதிகமாக இருந்ததால், அது வலுவிழந்து கரை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ‘தானே’ புயலின் நிலை அப்படி இல்லை. 27 டிகிரி செல்சியஸ் கடல் வெப்பம் இருந்தால் ‘தானே’ புயலும் படிப்படியாக வலுவிழக்கும். நேற்றைய நிலவரப்படி 26.5 டிகிரி செல்சியஸ் கடல் வெப்ப நிலை இருந்ததால் படிப்படியாக இதுவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.

சேறு, மணலுடன் சீற்றம்

‘தானே’ புயல் காரணமாக கடல் மட்டத்தில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடலில் சீற்றம் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் கடல் அலைகள் கடலில் உள்ள சேறுடன் தரைக்கு வந்தது. இதற்கு காரணம் ஆழம் குறைவாக இருப்பதுதான். இருப்பினும், ‘தானே’ புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதால், காற்றில் அழுத்தம் கடலை நோக்கி அதிகமாக வருவதால் கடலில் ஆழம் குறைவான இடங்களில் அலைகள் ஏற்படும் போது சேற்றையும், மணலையும் எடுத்து வருகிறது.

பெயர் வந்தது எப்படி

பசிபிக் கடல் பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் பெயர் சூட்டி வருகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து புயலுக்கு பெயர் வைத்து அதை சர்வதேச வானிலை நிறுவனம் அங்கீகரித்து வெளியிடுகிறது. இதன்படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன.

இந்த பெயர் சூட்டும் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2004 முதல் நமது பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு இந்த நாடுகள் இட்ட பெயர்களை வைத்துள்ளனர். இப்போது வந்துள்ள ‘தானே’ புயலுக்கு மியான்மர் நாடு பெயர் சூட்டியுள்ளது. அந்த நாட்டின் ஜோதிட நிபுணர் மின்தானேகா பெயரைத்தான் சுருக்கி இப்படி வைத்துள்ளனர்.

தானே' புயல் மீட்பு பணிக்காக புதுவை, ஆந்திரா, தமிழகத்துக்கு பேரிடர் படையினர் விரைந்தனர்!

அரக்கோணம்::தானே' புயலால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேற்று 5 குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர். ‘தானே’ புயல் இன்று கடலூர்&நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ‘தானே’ புயலால் சென்னை முதல் கடலூர் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல் தாக்குதலால் ஏற்படும் மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணி களில் ஈடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தின் கமாண்டன்ட் நெடுஞ்செழியன் உத்தரவின்பேரில், திருவள்ளூருக்கு உதவி கமாண்டன்ட் சுக்வீர்சிங், கடலூருக்கு உதவி கமாண் டன்ட் சேன்ரியூ, நாகப்பட்டினத்திற்கு உதவி கமாண் டன்ட் சட்சிங், நெல்லூ ருக்கு உதவி கமாண்டன்ட் உத்தம்கேசப் மற்றும் புதுச்சேரிக்கு துணை கமாண் டன்ட் தாங்க் ஆகியோர் தலைமையில் தலா 35 வீரர்கள் கொண்ட 5 குழுக்கள் தனித்தனியே பிரிந்து சென்றுள்ளனர். மேலும் அவர்கள் தங்களுடன் அதிநவீன மீட்பு படகு, லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment