Tuesday, December,27, 2011மும்பை : சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் தொடங்கினார். முன்னதாக மும்பை ஜூகு கடற்கரைக்கு சென்று காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அவர் சென்ற வாகனத்தை கருப்பு கொடியுடன் 20 பேர் வழி மறித்தனர். அன்னா ஹசாரே ஒழிக என்று சத்தம் போட்டனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. அன்னாவுடன், அவரது குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வீடுகளுக்கு முன்பு 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் போராட்டத்தின் போது அன்னாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மகாராஷ்டிரா போலீசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக், பிராந்திய கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரே பாட்டீல், மண்டல துணை கமிஷனர் சத்யநாராயணன் சவுத்ரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மைதானத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், உண்ணாவிரதத்தில் பங்கேற்க வரும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதிரடிப்படை போலீசுடன் வெடிகுண்டு நிபுணர்களும் மைதானத்தில் நிறுத்தப்பட உள்ளனர். மைதானத்துக்குள் செல்போன் எடுத்து செல்லலாம். கைப்பை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் நிசார் தம்போலி தெரிவித்துள்ளார்...
நாடாளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா மீது விவாதம் தொடங்கியது!
புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட புதிய லோக்பால் மசோதா மீது இன்று விவாதம் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த விவாதம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ. சார்பாக 37 திருத்தங்கள் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பாக மொத்தம் 56 திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. ஊழலை ஒழிக்க லோக்பால் வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். மே.வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிறகு லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என மத்திய அரசு உறுதி அளித்ததை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
லோக்பால் உருவாக்க 10 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதில் அன்னா குழுவினர் 5 பேர் மற்றும் மத்திய அமைச்சர்கள் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். லோக்பால் அதிகார வரம்பு நிர்ணயிப்பது தொடர்பாக பல முறை இந்தக்குழு கூடி விவாதித்தது. இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. வலுவான லோக்பால் வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா அறிவித்தார். உண்ணாவிரதத்துக்கு புறப்படும் சமயத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரை மத்திய அரசு விடுதலை செய்தது. இதன் பின்னர் 13 நாட்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா உண்ணாவிரதம் இருந்தார். நாடு முழுவதும் அன்னாவுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அன்னாவின் கோரிக்கைகளை ஏற்பதாக பிரதமர் வாக்களித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு அன்னா உண்ணாவிரதத்தை முடித்தார்.
இதை தொடர்ந்து கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சிபிஐ மற்றும் மத்திய அரசின் சி, டி குரூப் ஊழியர்களை சேர்க்க வேண்டும் என்ற அன்னாவின் கோரிக்கைகள் மத்திய அரசின் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. வலுவான லோக்பால் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அன்னா எச்சரித்தார். இதற்கிடையில் நாடாளுமன்ற நிலைக்குழு லோக்பால் மசோதாவில் பல திருத்தங்களை பரிந்துரை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் புதிய லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டது. புதிய மசோதாவில் லோக்பால் வரம்புக்குள் சில நிபந்தனைகளுடன் பிரதமர் சேர்க்கப்பட்டார். சிபிஐயை சுதந்திரமான அமைப்பாக மாற்ற அதன் இயக்குனரை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் கடைநிலை ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் மேற்பார்வையில் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் விசாரிக்க வகை செய்யப்பட்டது. மேலும் லோக்பாலில் சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த புதிய மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான 22ம் தேதி கடும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.
புதிய லோக்பால் மீது விவாதம் நடத்துவதற்காக குளிர்கால கூட்டத்தொடர் 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. விவாதத்தில் அனைத்து எம்பிக்களும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பா.ஜ. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த லோக்பால் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 56 திருத்தங்கள் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜ தரப்பில் 37 திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயை லோக்பால் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது, மத்திய அரசின் கடைநிலை ஊழியர்களை லோக்பால் வரம்பில் சேர்ப்பது, லோக்பால் குழுவில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, 50 சதவீதத்துக்கு குறையாத இடஒதுக்கீடு என்ற வாசகத்துக்கு பதிலாக 50 சதவீத ஒதுக்கீடு என வாசகத்தை மாற்றுவது, லோக்ஆயுக்தா விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு கூடாது உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. இடதுசாரிகள் தரப்பில் 11 திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மக்களவையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பின்னர் பா.ஜ. எதிர்க்கட்சி தலை வர் சுஷ்மா ஸ்வராஜ் மசோதா பற்றி பேசினார். விவாதம் தொடர்ந்து நடந்தது.
மக்களவையில் கூச்சல்:
காலையில் மக்களவை கூடியதும், லோக்பால் மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, மசோதாவின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். அப்போது அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் வேறு சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில் பா.ஜ., இடதுசாரிகளின் எதிர்ப்பை சமாளிக்க சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவை மத்திய அரசு நாடியது. இது தொடர்பாக முலாயம்சிங் யாதவ் மற்றும் லாலு பிரசாத்துடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் லோக்பால் மசோதா மீதான விவாதம் தொடங்கியது.
No comments:
Post a Comment