Friday, December 9, 2011

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் செயல்பாடு சரியல்ல: மு.கருணாநிதி!

Friday, December 09, 2011
சென்னை: விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயற்குழு கூட்டம் இன்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த இந்த செயற்குழுக் கூட்டத்தில், பேராசிரியர் க. அன்பழகன், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாக முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைபற்றி விவாதிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார். மேலும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் படி கேரள அரசு நடந்து கொள்ள மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய கருணாநிதி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு மதுரையில் அன்பழகனும், தேனியில் பொருளாளர் மு.க., ஸ்டாலினும் தலைமை வகிப்பார்கள் என்று கலைஞர் கூறினார்.

போராட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம்:

வருகிற 12-12-2011 திங்கள் கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், நகரங்களிலும், காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு நாள் உண்ணா விரத போராட்டம்.

அதற்கடுத்து 15-12-2011 வியாழக்கிழமையன்று முல்லைப் பெரியாறு அணையினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமனாதபுரம் மாவட்டங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை திமுக சார்பில் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு போராட்டம்.

No comments:

Post a Comment