Wednesday,December,14,2011கம்பம்:தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு பகீரத பிராயாத்தனம் செய்து வருகிறது. இதற்காக கேரள சட்டசபையில் புதிய அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றியது.
அதற்கு முன் அணையில் 120 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவிட வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தது. கேரளாவின் இந்த அடாவடி செயல் தமிழகத்தின் தென்பகுதியான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த 10 நாட்களாக முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை காக்கவும், கேரள அரசை கண்டித்தும் தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
தேனி மாவட்டம், கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி, அணியாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிய கேரளாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், வீண் வதந்திகளை பரப்பக்கூடாது எனவும் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை போலீசார் நேற்று மாலையே ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் எடுத்து கூறினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் போலீசார் நேற்று மாலை முதலே தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒலிபெருக்கிகள் கட்டிய வேன்களில் சென்று பெரியாறு அணையில் 136 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே மக்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென வேண்டுகோள் விடுத்தனர்.
கம்பம், சின்னமனூர், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, காமய கவுண்டன்பட்டி உள்பட 27 பேரூராட்சிகள், 32 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு சென்று தண்டோரா போட்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை போலீசார் தெரியப்படுத்தினர். இதனால் தேனி மாவட்டத்தில் மக்கள் சமாதானம் அடைந்து அமைதி பாதைக்கு திரும்பியது.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது. உத்தமபாளையம், கம்பம், கூடலூர், போடி, கோம்பை, தேவாரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. பள்ளிகளும் வழக்கம்போல் திறந்து மாணவ-மாணவிகள் வந்தனர்.
கடந்த 10 நாட்களாக தேனி மாவட்டத்துக்குள் முடங்கி கிடந்த போக்குவரத்து இன்று தொடங்கியது. தேனியில் இருந்து கூடலூர், கம்பம், போடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயங்க தொடங்கின.
ஆனால் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வாகன போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. போராட்டம் காரணமாக கேரளா செல்லும் லாரிகள், அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் கோவை பாலக்காடு மார்க்கமாகவும், செங்கோட்டை வழியாகவும் செல்கிறது. தற்போது அமைதி திரும்பியதையடுத்து தேனி மாவட்டம் வழியாக விரைவில் கேரளாவுக்கு வாகன போக்குவரத்து தொடங்கிவிடும்.
No comments:
Post a Comment