Saturday, December 31, 2011

அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கி தீர்வு காண வேண்டும்-அமைச்சர் வாசுதேவா!

Saturday,December,31,2011
இலங்கை::அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தீர்வு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவநாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், அரசியல் தீர்வு என்பது நாட்டிற்கு அத்தியாவசிய விடயமாகவே காணப்படுகின்றது. இதனால் தான் அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது.

அடுத்தாண்டில் நிச்சயம் தீர்வு வந்து விடும். இதற்கு தடையாக உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இணக்கப்பாட்டுடன் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

உதாரணமாக சிறு குற்றங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும். காணி அதிகாரத்தில் மத்திய அரசிற்கும் மாகாண சபைக்கும் இடையில் பொது சுயாதீன ஆணைக்குழு ஊடக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதனை ஒரு யோசனையாகவே கூற விரும்புகின்றேன்.

விரைவில் அரசியல் தீர்வை வழங்க முடியாமைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மீதான பிரச்சினையே காரணமாகும்.

இதனை தொடர்ந்தும் இழுபறி நிலையில் வைத்துக் கொள்ள முடியாது. புது வருடத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதனூடாக விரைவில் தமிழ் மக்களின் அரசியல் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவேண்டும்.

அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment