Wednesday, December 7, 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை தோல்வி:-இலங்கைக்கு கடல் அட்டை கடத்த முயன்ற 3 பேர் கைது!

Wednesday,December,07,2011
ராமநாதபுரம் : தொடர் போராட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாந்த், லாங்லெட் ஆகியோர், கடந்த நவ., 28ல் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் பிடித்து, இலங்கை போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி, நவ., 28 முதல், ராமேஸ்வரம் மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் தலைமையில், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க செயலர் போஸ் கூறியதாவது: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை, டிச., 19 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று மீனவர்கள் விடுவிக்கப்படா விட்டால், அனைத்து மீனவர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து, கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். இவ்வாறு போஸ் கூறினார்.

இலங்கைக்கு கடல் அட்டை கடத்த முயன்ற 3 பேர் கைது!

ராமநாதபுரம் : இலங்கைக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை, கடத்த முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக, வேனில் ஒரு கும்பல் கடல் அட்டையுடன் வருவதாக கிடைத்த தகவலின்படி, ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் பழனிக்குமார், பண்டாரம் ஆகியோர் பிரப்பன் வலசையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனில் 38 மூடைகளில் இருந்த 450 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10 லட்சம் ரூபாய். இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. கடல்அட்டை கடத்தி வந்த வண்ணாங்குண்டு ரமலான், 34, ஆம்னி டிரைவர் நாகப்பட்டினம் தேவராஜன், 28, முகம்மது அம்ஜத்கான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment