Friday, December 09, 2011திருவண்ணாமலை : கார்த்திகை மகாதீபம் திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் நேற்றுமாலை சரியாக 5.54 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீப தரிசனம் செய்தனர். பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 10ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை மகா தீபப்பெருவிழா நடந்தது. பிற்பகல் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5.00 மணியளவில் மேளதாளம் முழங்க கோயில் தங்க கொடி மரம் அருகில் உள்ளதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். உண்ணாமலையம்மனுக்கு தனது உடலில் இடபாகம் அளித்து Ôஅர்த்தநாரீஸ்வரர்Õ திருக்கோலத்தில் கோயிலுக்குள் இருந்து வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை, சில நிமிடங்கள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளும் காட்சியை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் Ôஅண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமசிவாயÕ என முழக்கமிட்டனர்.
இதையடுத்து கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டு, மலையை நோக்கி தீபம் காட்டப்பட்டது. மாலை 5.54 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. இந்த மகா தீபம் 3,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணி திரியால் ஏற்றப்பட்டது. மலை மீது ஜோதி வடிவாக அண்ணாமலையார் காட்சியளித்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. கோயில் வளாகம் வண்ணமின் விளக்குகளால் ஜொலித்தது.
மகா தீபத்தை அருகில் சென்று தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர். நாடு முழுவதிலும் இருந்து மகா தீப தரிசனம் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலை நகரமே திக்குமுக்காடியது. தமிழக அமைச்சர்கள் பரஞ்சோதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சிஆர்பிஎப் இயக்குனர் விஜயகுமார், ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரதசாகு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மகா தீபதரிசனத்தில் கலந்துகொண்டனர். சுமார் 20 லட்சம் பக்தர்கள் தீபதரிசனம் கண்டனர்.
காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். இதனால், 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
மகா தீபத்தை முன்னிட்டு, வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மலைப் பகுதியில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலூனில் பறக்க விடப்பட்ட அதி நவீன காமிரா, பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டிருந்த சுழல்காமிராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலிலும் மாலை 6.30 மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப கம்பத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment