Wednesday, December 7, 2011

கேரளா செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்:தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு: 2-வது நாளாக பதற்றம் நீடிக்கிறது!

Wednesday,December,07,2011
கூடலூர் : முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக& கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. கம்பம், குமுளி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணை விவகாரம், தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பற்றி எரியத் துவங்கியுள்ளது. கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதால் குமுளியில் பதற்றம் காணப்படுகிறது.

கேரள பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் கேரள போலீசார் 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். கம்பம், கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திரும்பும் வாகனங்கள்: ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. சபரிமலை செல்ல வந்த பக்தர்களின் வாகனங்களை தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.

எல்லையில் வாகனங்கள் தடுக்கப்படுவதால், கேரளா நோக்கி சென்ற வாகனங்கள் மீண்டும் தேனி நோக்கி திரும்பி வருகின்றன. கூடலூர் எல்லை பகுதியில் என்எஸ்கேவி பள்ளி அருகே பென்னிகுக் படத்துடன் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கார் எரிப்பு: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவர் கேரளாவில் மாங்காய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை கம்பம்மெட்டு வழியாக காரில் செல்ல முயன்றார். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், மண்புழு பண்ணை அருகே காரை நிறுத்திவிட்டு ஊருக்கு திரும்பினார். நேற்று மதியம் ஒரு மர்மக்கும்பல் காரை தீ வைத்து எரித்தது.

100 ஜீப் சிறை பிடிப்பு : தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம் கேரளாவுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஜீப்புகளை சிறைபிடித்து ஒரு கும்பல் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று டிரைவர்களும், பெண் தொழிலாளர்களும் நடந்தே கம்பம் மெட்டு வந்து சேர்ந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் கேரள வாகனங்கள் அனைத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சில ஜீப்புகள் மட்டும் விடுவிக்கப்பட்டன.

கேரளாவுக்கு லாரிகள் போகாது’

நாமக்கல் : தமிழக டிரைவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் கேரளாவுக்கு லாரிகளை இயக்க மாட்டோம் என மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது: முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தேவையின்றி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் லாரிகள் குறி வைத்து தாக்கப்படுகிறது. டிரைவர், கிளீனர்கள் தாக்கப்படுகின்றனர். லாரியில் உள்ள பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

எனவே, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் லாரி டிரைவர், கிளீனர்களுக்கு உரிய பாதுகாப்பை இரு மாநில அரசும் கொடுக்க வேண்டும். லாரியில் உள்ள பொருட்களும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர், மருந்து பொருட்களும் கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக லாரி டிரைவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு நல்லதம்பி கூறினார்...

தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு: 2-வது நாளாக பதற்றம் நீடிக்கிறது!

தேனி: தமிழகம் - கேரளா எல்லையில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. எல்லைப்பகுதியில் மோதலை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், கேரள மாநிலம், குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தேனி மாவட்டம் கூடலூரில் குமுளி நெடுஞ்சாலையில் நேற்றும் சாலை மறியல் நடந்தது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து குமுளி மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு 2-வது நாளாக போக்குவரத்து முடங்கியது. சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் மட்டும் மலைச்சாலை வழியாக கூடலூருக்கு வந்தன. அந்த வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. அந்த வாகனங்களில் வந்த பக்தர்கள், வண்டிப்பெரியாறு அருகே தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கூடலூரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் மறியல் காரணமாக தமிழக எல்லையில் கூடலூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூடலூருக்கு வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

தேனி மாவட்ட எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு சாலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. கேரளாவிற்குச் செல்லும் மற்றொரு மலைச்சாலையான போடிமெட்டு பாதையில் நேற்று முன்தினம் இரவு முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தேனி மற்றும் போடி பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் 2 பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் கேரள எல்லைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இரவில் கம்பத்தில் கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தாக்குதல் நடந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில், நேற்று 2-வது நாளாக கம்பத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

கம்பம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டியில் கேரள லாரிக்கு நேற்று முன்தினம் இரவில் தீ வைக்கப்பட்டது. நாராயணதேவன்பட்டியில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு ஜீப் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

கம்பம் மெட்டு சாலையில் 150-க்கு மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று கேரள அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பகல் 12 மணி அளவில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்த போராட்டங்களினால் கம்பம் நகரில் பதற்றம் நீடிப்பதுடன் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்பம் மெட்டுச்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட ஏலத்தோட்ட பெண் தொழிலாளர்கள், கேரள மாநிலத்தவர்கள் தங்களை கடுமையாக நடத்தியதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் ஏராளமான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த கேரள பதிவு எண் கொண்ட காரும், தனியார் மண்புழுக்கூடமும் தீவைத்து எரிக்கப்பட்டன.

குமுளியில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் பயணிகளை கூடலூர் வரை ஏற்றிச்செல்ல போலீஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு சில அய்யப்ப பக்தர்களும் கூடலூரில் இருந்து நடந்தே குமுளிக்குச் சென்றனர்.

இதற்கிடையில் கூடலூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று (புதன் கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு அறிவித்து உள்ளது.

கம்பம், லோயர் கேம்ப், கூடலூர் மற்றும் குமுளியில் பதற்ற நிலை நீடிப்பதால், கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுரை வழங்கினார்கள். அவசர வேலையாக செல்பவர்கள் நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கோவை அருகில் உள்ள பாலக்காடு வழியாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர் இ.தேவதாசன் ஆகியோர் நேற்று டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசி எல்லைப் பகுதி நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் நேற்று ஒரு பஸ்சில் குமுளி வழியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். குமுளி அருகே ஹோலிடே ஹோம் என்ற இடத்தில் மாலை 3.15 மணியளவில் பஸ் சென்ற போது ஜீப்பில் வந்த சிலர் அய்யப்ப பக்தர்களின் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின.

திடீரென நடந்த இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் செய்வதறியாது கூச்சல் போட்டனர். இதையடுத்து இந்த ஜீப்பில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து வண்டிப்பெரியார் சாலையை நோக்கி தப்பி சென்று விட்டனர்.

பதற்றத்தை தணிப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள 3 எல்லைச் சாலைகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகள் மற்றும் போராட்டம் தீவிரமாக நடைபெறும் லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் பகுதிகளில் போலீஸ்படை குவிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் நெல்லை, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 மலைச்சாலைகளையும் கண்காணிக்கும் பணியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மதுரை 6-வது பட்டாலியன்படை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், பழனி 14-வது படை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரபிதாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேனி மாவட்டம், உத்தம பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சின்னமனூர், கம்பம், க.புதுப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, காமாட்சிபுரம், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளன.

நிர்வாக நடுவர்கள் மேலும் கம்பம் பகுதியில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாதவண்ணம் தடுத்து கண்காணிப்பில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக பக்தர்களுக்கு உதவ தொலைபேசி எண்:

தமிழக கேரள எல்லையில் தவிக்கும் பக்தர்களுக்கு வசதியாக தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குமுளியில் 66வது மைல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தமிழக போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. 094474 74009 மற்றும் 04869 224252 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment