Friday, December 30, 2011

தானே உஷார் முடங்கியது இயல்புநிலை:தானே புயல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Friday, December,30, 2011
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்படும் பெயர் ‘தானே’. வங்கக் கடலில் ஒரு வாரம் முன்பு குறைந்த காற்றழுத்த நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று தற்போது படுபயங்கர புயலாக கரையை கடந்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பானில் சூறாவளி அபாயம் அதிகம் என்பதால் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து அழைப்பார்கள். வங்கக் கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களை நாமும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்ற ஐடியா உதயமானது 2004ல். பெயர் வைக்கும் வேலையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தளித்தது சர்வதேச வானிலை ஆய்வு துறை. மொத்தம் 64 பெயர் பட்டியலிடப்பட்டன. இதுவரை பெயர் வைத்து அழைத்து 28 புயல்களை அனுப்பி வைத்திருக்கிறோம். மியான்மர் நாடு வைத்த பெயர் ‘தானே’. வங்கக்கடலில் இது உருவாக ஆரம்பித்ததில் இருந்தே பல பகுதிகளிலும் பரவலாக மழை தொடங்கிவிட்டது. கரையை நெருங்க நெருங்க மழை வலுவடைந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக கூரைகள் பறந்து, மரங்கள் முறிந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இத்தனை கி.மீ. வேகத்தில், இத்தனை தூரத்தில் புயல் வந்துகொண்டிருக்கிறது என்று துல்லியமாக கணக்கிடக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ரமணன் தினமும் ரன்னிங் கமென்ட்ரி கொடுக்கிறார். அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக முடிகிறது.

மக்கள் உஷாராகிறார்கள். முன்னேற்பாடு நடவடிக்கைகளை எளிதாக எடுக்க முடிகிறது. ‘வெளியே போகவேண்டாம். மரம், மின்கம்பங்கள் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்’ என்று தெளிவாக எச்சரிக்க முடிகிறது. சில நேரங்களில் அனாவசியமாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட நேர்ந்தாலும் புயல் வருகையை ஓரளவு துல்லியமாக தெரிந்துகொள்ள முடிவதே அறிவியல், தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றிதான். அரசு தரப்பில் ஏற்பாடுகள் இன்னும் பக்காவாக இருந்தால், பாதிப்புகளை இன்னும்கூட தவிர்க்க முடியும். மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை சீரான இடைவெளியில் சரிசெய்யலாம். ஆறு, ஓடை, வாய்க்கால்களில் குப்பை போன்ற அடைப்புகள் தேங்காமல் அடிக்கடி தூர் வாரலாம். தண்ணீருக்காக சண்டை போடும் தீவிரத்தை நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் செலுத்தலாம். குளம், ஏரிகளில் நீர் தேங்க வசதியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றலாம். மழை பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் அதே நேரம், கோடையில் குடிநீருக்கு திண்டாடுவதையும் தவிர்க்கலாம். அரசு இதில் கவனம் செலுத்தினால், புயல்கள் ‘தானே’ போய்விடும்!

No comments:

Post a Comment