Saturday, December 10, 2011

மறியலால் கூடங்குளத்தில் பதற்றம் வேலைக்கு சென்ற 10 பேர் சிறைபிடிப்பு!

Saturday, December 10, 2011
வள்ளியூர்::கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு இன்று பணிக்கு சென்ற 10 பேரை போராட்டக்குழுவினர் சிறை பிடித்தனர். அணுமின்நிலைய வளாகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணுமின்நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று 117வது நாளாக இடிந்தகரையில் லூர்து மாதா ஆலய வளாகத்தில் போராட்டக்குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று காலை கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிக்கு சென்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த 10 பேரை போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் திடீரென்று வழிமறித்தனர். பின்னர் அவர்களை வலுக்கட்டாயமாக கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். இதற்கிடையே கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடங்குளம் அணுமின்நிலையம் முன்பு திரண்டனர். அணுமின் நிலைய நுழைவு வாயிலை மறித்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. தகவலறிந்த சேரன்மகாதேவி ஆர்டிஓ ராஜகிருபாகரன், ஏஎஸ்பி விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான போலீசார் கூடங்குளம் திரண்டு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சு நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவாயிலை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment