Saturday, November 5, 2011

மும்பையில் நடத்தியது போல் பயங்கர தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதி திட்டம்: மீனவர்கள் வேடத்தில் ஊடுருவ முயற்சி!

Saturday, November 05, 2011
புதுடெல்லி:மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் பலியானார்கள். நவம்பர் மாதம் 26-ந்தேதி தாக்குதலை தொடங்கிய தீவிரவாதிகள் 29-ந்தேதி வரை பதுங்கி இருந்து நாச வேலை செய்து உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல தடவை முயற்சி செய்தனர்.ஆனால் அந்த முயற்சிகளை எல்லாம் உளவுத்துறையின் எச்சரிக்கை மூலம் உரிய நேரத்தில் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

இதையடுத்து புதிய வழிகளைப் பயன்படுத்தி ஊடுருவ தீவிர வாதிகள் திட்டமிட்டுள்ளனர். 2008-ல் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதுபோல இந்த தடவையும் கடல் வழியாக ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் மீனவர்கள் போல வந்து இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கடலோரத்தில் எங்கெங்கு பலவீனமாக உள்ளது என்பதை உறுதி செய்த பிறகு, தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் உள்ள முக்கிய நிலைகள்தான் தீவிரவாதிகளின் குறியாக உள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணை சேமிப்பு கிடங்குகள், எண்ணை குழாய்கள் போன்றவற்றைத் தாக்கி மிகப்பெரும் அழிவை உண்டாக்க நினைக்கிறார்கள்.

எண்ணை கிடங்குகளை தாக்கி அழிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியும் என்று தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். எண்ணை சேமிப்பு கிடங்குகளை தாக்கி அழிப்பதோடு, தீவிரவாதிகளின் மற்றொரு பிரிவு நகருக்குள் ஊடுருவி மக்கள் மீது தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளனர்.

இந்த தகவல்களை சமீபத்தில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இரண்டு பேர் போனில் பரிமாறிக் கொண்டபோது உளவுத்துறை ஒட்டு கேட்டு கண்டுபிடித்துள்ளது. இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் உள்ள மும்பை, கொச்சி ஆகிய 2 நகரங்களும் தீவிரவாதிகளின் கொலை வெறிப்பார்வையில் உள்ளது.

இந்த இரு நகரங்களிலும் பாதுகாப்பு அதிகமாக உள்ளதால், தீவிரவாதிகள் வேறு இடங்களில் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேற்கு கடலோரத்தின் எந்த பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளனர் என்ற தகவலை வெளியிட உளவுத்துறையினர் மறுத்து விட்டனர்.

ஆனால் மீண்டும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் திட்டத்தை லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜாகீர் ரஹ்மான் லக்வி வகுத்து கொடுத்து, ஆள் மற்றும் நிதி உதவி செய்துள்ளதாக உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டவன் இந்த ஜாகீர் ரஹ்மான் லக்விதான். இதற்காக கைதான அவன் ராவல்பிண்டியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். சிறைக்குள் இருந்த படியே அவன் தற்கொலைப் படையை உருவாக்கி அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளான். அவனது திட்டத்தை உளவுத்துறை சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால், கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment