Wednesday, November 30, 2011

இலங்கை தீவில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள்!

Wednesday, November 30, 2011
ராமேஸ்வரம்: புயல் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட பின், மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கினர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி, விரட்டியடித்தனர். வேறு பகுதிக்கு சென்ற மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து, நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்.

கிளாடுவின், ராமு ஆகியோரின் இரண்டு படகுகள் கரை திரும்பவில்லை. கிளாடுவின் படகு இலங்கை நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியதாக இலங்கை மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த படகில் சென்ற எமர்சன், அகஸ்டன், பிரசாந்த் உட்பட 5 மீனவர்களை மீட்க, மீன்துறை அதிகாரிகள் நடவடக்கை எடுத்துள்ளனர். ராமுவின் படகு பழுதடைந்து நடுக்கடலில் நிற்கிறது. அவரை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்கரை படையினர் பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர். "மீனவர்களையும், படகையும் விடுவிக்கும் வரை இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக' ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கேபிள் வயர்கள் சிக்கின: வேலாயுதம் என்பவரின் படகில் சென்ற மீனவர்கள், மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கனமான கேபிள் வயர்கள் வலையில் சிக்கியது. மீன்களுடன் ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள், அந்த கேபிள் வயர்களை கடற்கரையில் வீசி சென்றனர். இரும்பு தகடுகளால் சுற்றப்பட்டுள்ள கேபிள் வயரின் உட்புறம் காப்பர் கம்பிகள் உள்ளன.கடந்த 1964 புயலுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நடந்தபோது, தகவல் தொடர்புக்காக இரண்டு துறைமுகங்களுக்கும் இடையே கடலில் கேபிள் அமைக்கப்பட்டது.

புயலில் தனுஷ்கோடி சேதமடைந்ததை தொடர்ந்து தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேபிள்கள் கடலின் அடியில் புதைந்தன. சில ஆண்டுகளுக்கு முன், மீனவர்கள் சிலர் கடலில் மூழ்கிய கேபிளை வெட்டியெடுத்து வந்து விற்றனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்த பின், கேபிள்களை கொண்டு வருவது தடைப்பட்டது. தற்போது கடற்கரையில் வீசப்பட்ட 150 கிலோ எடையுள்ள கேபிள் வயர்களை, ராமேஸ்வரம் மரைன் போலீசார் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment