Monday, November 14, 2011

சென்னையில் இருந்து மலேசியா கடத்த இருந்த ரூ.6.5 கோடி ஹெராயின் பறிமுதல்: ஏர்போர்ட்டில் விமான நிறுவனத்தின் பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் இலங்கையைர் உள்பட 6 பேர் கைது!

Monday, November 14, 2011
சென்னை: மீனம்பாக்கம்: மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.6.5 கோடி மதிப்புள்ள ஹெராயினை சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தனியார் விமான நிறுவனத்தின் பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான அதிகாரிகள் நேற்றிரவு முதல் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், இன்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் அனைவரிடமும் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பஸ்கள் மூலம் விமானம் அருகே அழைத்து வரப்பட்டனர். அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் ஏறுவதற்கு ஆயத்தமாகினர்.

அப்போது பயணிகளை ஏற்றி வந்த ஒரு பஸ்சின் டிரைவர், அங்கிருந்த மூன்று பேரிடம் ஒரு பார்சலை கொடுத்தார். இதைப் பார்த்த டிஆர்ஐ அதிகாரிகள், விரைந்து சென்று பயணிகளையும் பஸ் டிரைவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். பிரித்து பார்த்தபோது, அதில் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிடிபட்ட பயணிகளை உடனடியாக டிஆர்ஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது மசூர் (40), ஹத்தாரியா (35) என்ற பெண் மற்றும் இலங்கையை சேர்ந்த அப்துல் காதர் அலீம் (35) என்பதும், ஹெராயினை அவர்களிடம் ஒப்படைத்த பஸ் டிரைவர் வண்டலூர் வெங்கம்பாக்கத்தை சேர்ந்த பாலகுமார் (30) என்பதும் தெரியவந்தது. பார்சலில் மொத்தம் 6 கிலோ 380 கிராம் ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும். அவர்கள் 4 பேரையும் கைது செய்து, தி.நகரில் உள்ள டிஆர்ஐ தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஹெராயினை கடத்த சொன்ன ஜாகீர் (40), மணிகண்டன் (35) ஆகியோரை கிண்டி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனைகளை கடந்து போதைப் பொருள் கடத்தப்படுவதும், கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள். இதுபோன்ற கடத்தல்கள், சிறு அளவில்தான் நடந்து வந்தது. தற்போது ஏர்போர்ட்டில் பயணிகளை அழைத்து செல்லும் பஸ் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டு, விமானத்துக்குள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானம் அருகே ஹெராயினை கொண்டு சென்றது எப்படி?

விசாரணையின்போது, பிடிபட்ட கடத்தல்காரர்கள் கூறியதாவது: போதைப் பொருளை பணத்துக்காகவே கடத்தினோம். இதுபற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. சென்னை கிண்டியை சேர்ந்த ஜாகீர், மணிகண்டன் இருவரும்தான் எங்களிடம் இதை தந்தனர். கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் அவர்கள் சொன்னவரிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டு பார்சலை எடுத்து செல்ல ஒப்புக் கொண்டோம். பார்சலை விமானம் அருகே கொண்டு வந்து தருவதற்காக, பஸ் டிரைவரை அவர்கள்தான் ஏற்பாடு செய்தனர்.

விமான நிலைய பஸ் டிரைவர்கள் வருவதற்கென தனி வழி உள்ளது. அதன் வழியாகவே இந்த பார்சலை டிரைவர் உள்ளே எடுத்து வந்து பஸ்சில் வைத்தார். நாங்களும் அந்த டிரைவர் ஓட்டிய பஸ்சில் சென்று ஏறிக் கொண்டோம். விமானம் அருகே வந்தபோது, யாருக்கும் சந்தேகம் வராதபடி எங்களிடம் அந்த பார்சலை தந்தார். பத்திரமாக எங்களிடம் பார்சல் ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிந்ததும் ஜாகீரும் மணிகண்டனும் புறப்பட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு விஷயத்தில் அதிர்ச்சி!

மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: மலேசியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் 6 பேரை கைது செய்துள்ளோம். இதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளோம். சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் கைதான சம்பவம் பலமுறை நடந்துள்ளது. ஆனால், ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரின் நேரடி தொடர்புடன் நடந்த சம்பவம் இதுதான். சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக தனியார் விமான நிறுவன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முதல் தீவிர சோதனை நடத்தி வந்தோம். இவ்வளவு பெரிய கடத்தல் கும்பல் பிடிபடும் என எதிர்பார்க்கவில்லை. விமான நிறுவன பஸ் டிரைவர்கள் ஏர்போர்ட்டுக்குள் வருவதற்கு தனி கேட் உள்ளது. அங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களை தீவிரமாக சோதனை செய்தபிறகே அனுப்புவார்கள். அடையாள அட்டையை பார்த்து, உடலை தடவிப் பார்த்துதான் அனுப்புவார்கள். அப்படி இருந்தும் எப்படி இந்த பார்சலை டிரைவர் எடுத்து வந்தார் என்பது மர்மமாக உள்ளது.

அவரிடம் சோதனை நடத்தவில்லையா என்பது பற்றியும் விசாரிக்கிறோம். இது பாதுகாப்பு சம்பந்தபட்ட விவகாரம். போதை பொருள் கடத்தி செல்வது போன்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை எடுத்து சென்றிருந்தால் என்னவாயிருக்கும். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜன் கூறினார்.

No comments:

Post a Comment