Monday, October 03, 2011இந்திய ராணுவப் படையில் பெண்கள் இதுவரை போரில் ஈடுபடாத வகையில் அதிகாரிகள் அந்தஸ்தில் மட்டுமே நியமிக்கப்பட்டன.
தற்போது போரில் ஈடுபடும் வகையில் தரைப்படையினர் ரெயில்வே என்ஜினீயர் பிரிவில் ஜவானாக பெண் ஒருவர் முதன் முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவரது பெயர் சாந்தி டிக்கா (வயது 35).
இவர் 2 குழந்தைகளுக்கு தாயார் ஆவார். ஜவானுக்கான உடல் தகுதி தேர்வில் சாந்தி டிக்கா ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டார். ஓட்டப்போட்டியில் 1 1/2 கி.மீ. தூரத்தை ஆண்களை விட 5 விநாடிகள் குறைவான நேரத்தில் கடந்தார். 50 மீட்டர் ஓட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 12 வினாடிகளில் கடந்தார்.
முதல் பெண் ஜவானாக பணியில் சேர்ந்த சாந்தி டிக்கா கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள சல்சா ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேனாக பணியில் சேர்ந்த நான் தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
2005-ம் ஆண்டு எனது கணவர் இறந்த பிறகு அவருக்கு பதிலாக எனக்கு ரெயில்வே பணி கிடைத்தது. ரெயில்வே சார்ந்த பிரிவின் மூலம் ராணுவத்தில் சேர முடியும் என்பதை அறிந்த நான் தீவிரமாக பயிற்சி பெற்று ஜவானாக பணியில் சேர்ந்துள்ளேன்.
எனது உறவினர்கள் படைப்பிரிவில் சேருவதற்கு என்னை ஊக்கப்படுத்தினர். ராணுவத்தின் ஆலிவ் பச்சை நிற சீருடை அணிவதிலும், துப்பாக்கியை கையாள்வதிலும் மிகவும் பெருமைப்படுகிறேன். முதல் ஜவானாக தேர்வு பெற்றதன் மூலம் எனது குடும்பத்துக்கும் பெருமை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவப்பயிற்சி முகாமில் வழங்கப்பட்ட உடற்பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சிறந்து விளங்கிய சாந்தி டிக்காவை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment