Tuesday, October 11, 2011

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தேசிய பிரச்னையாக பாருங்கள் : முதல்வர் ஜெயலலிதா!

Tuesday, October 11, 2011
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை, தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாக். ஜலசந்தி அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த பிரச்னை தமிழக அரசுக்கு மிகவும் கவலை அளிக்கும் பிரச்னையாக இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் எனது தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நாள் முதல், இதுவரை 16 முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இதுகுறித்து நான் உங்களுக்கு கடிதம் எழுதினேன். அதன்பின்னர் ஜூன் 17ம் தேதி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். ஜூன் 20ம் தேதி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூன் 21ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் சிறை பிடிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமா என்ற அச்சத்துடனே மீன்
பிடிக்க சென்று வருகின்றனர். இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மாத்தை, கடந்த 8ம் தேதி சென்னையில் என்னை சந்தித்தார். மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

அன்றைய தினம் வெளியுறவு செயலர் கொழும்பு போய் சேர்வதற்குள் மண்டபம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியுள்ளனர். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, இந்திய அரசின் கடுமையான ஆட்சேபத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்தியாவின் மீது நடத்தப்படும் தாக்குதலாக இந்தியாவை உசுப்பிவிடும் நடவடிக்கையாக கருத வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தமிழ்நாட்டின் பிரச்னையாக கருதாமல் ஒரு தேசிய பிரச்னையாக கருத
வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment