Tuesday, October 04, 2011சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேரூராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 17ம் தேதியும் மற்ற இடங்களுக்கு 19ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி நடைபெறும். இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் இன்று முதல் 10ம் தேதி வரை, மண்டல வாரியாக உள்ளாட்சி பாதுகாப்பு குறித்து கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, இன்று காலை சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல் துறை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோ நாயகம், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி, காஞ்சிபுரம் கலெக்டர் சிவசண்முக ராஜா, வேலூர் கலெக்டர் நாகராஜன், விழுப்புரம் கலெக்டர் மணிமேகலை, திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கடலூர் கலெக்டர் அமுதவள்ளி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, காவல் துறை தலைவர் (தேர்தல்) அலெக்சாண்டர் மோகன், எஸ்.பி. (தேர்தல்) மோகன், காஞ்சிபுரம் டிஐஜி திருஞானம், எஸ்பி மனோகரன், திருவள்ளூர் எஸ்பி வனிதா, வேலூர் டிஐஜி ராமசுப்பிரமணி, எஸ்பி பாபு, விழுப்புரம் டிஐஜி வினித்தேவ் வான்கடே, கடலூர் எஸ்பி பகலவன் உள்ளிட்ட 23 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகள், வாக்குச் சாவடிகளை தயார் நிலையில் வைப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு மற்றும் கேமரா பொருத்துவது போன்ற விஷயங்களை தேர்தல் ஆணையர் அய்யர் வலியுறுத்தினார். வரும் 7ம் தேதி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் மதுரையில் நடக்கிறது.
8ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் திருச்சியிலும், 10ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் கோவையிலும் நடைபெறும். கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்குகிறார்.
No comments:
Post a Comment