Sunday, October 02, 2011தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்குக்கான காங்கிரஸின் உபகுழுவின் தலைவர் ஸ்டீவன் சபெட் கலந்துரையாடியுள்ளார்.அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஓஹையோ மாநிலப் பிரதிநிதியும், அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்குக்கான காங்கிரஸ் உபகுழுவின் தலைவருமான ஸ்டீவன் சபெட் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது இலங்கையின் இராஜதந்திர மட்டங்களில் பலரை சந்தித்ததுடன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற இராப்போசன விருந்தின் போதே ஸ்டீபன் சபெட் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையே இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகவே நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது மற்றும் மனித உரிமை தொடர்பாக இலங்கை அரசின் போக்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.அதே சமயம் இலங்கை அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழர் விடயத்தில் அமெரிக்க அரசு கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும் சபெட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment