Saturday, October 1, 2011

கருணாநிதி பேச்சு அமைச்சரவை தீர்மானம் மூலம்: ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

Saturday, October 01, 2011
கருணாநிதி பேச்சு அமைச்சரவை தீர்மானம் மூலம்: ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

சென்னை : திமுக முப்பெரும் விழா கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திமுக அறக்கட்டளை சார்பில் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு தலா ரூ10,000 வீதம் ரூ.2 லட்சம் மற்றும் சான்றிதழ்களை கருணாநிதி வழங்கினார். பாரதிதாசன் பாடல் ஒப்புதல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 10 பேருக்கு ரூ.72,000, நேர்மையான ஆட்டோ டிரைவர்கள் 5 பேருக்கு தலா ரூ.20,000 மற்றும் பதக்கங்களை கருணாநிதி வழங்கினார்.

முப்பெரும் விழாவை முன்னிட்டு சுப.வீரபாண்டி யனுக்கு பெரியார் விருது, ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணா விருது, நெல்லை உமா மகேஷ்வரிக்கு பாவேந்தர் விருது, முகமது சகிக்கு கலைஞர் விருது மற்றும் தலா ரூ.50,000, கேடயம் ஆகியவற்றையும் கருணாநிதி வழங்கினார். பாரதிதாசன் பாடலை ஒப்புத்த கோவையை சேர்ந்த எல்கேஜி மாணவன் ஆல்வின் அன்டோவை கருணாநிதி தட்டிக்கொடுத்து பாராட்டினார்.

விழாவில் கருணாநிதி பேசியதாவது: இங்கே பரிதி பேசும்போது அடுத்து வருவது திமுக ஆட்சி என்றதும் நீங்கள் பலத்த கரகோஷம் செய்தீர்கள். சொன்னவர் ஒருவர், கைதட்டியவர் ஆயிரக்கணக்கானவர். கரகோஷம் செய்து மீண்டும் திமுக ஆட்சிதான் வரப்போகிறது என்று சொன்னதை நம்பி கெட்டவன் நான். நான் மட்டுமல்ல, எத்தனையோ பேர், தாய்மார்கள் திமுக தோற்று விட்டதா, நாங்கள் போட்ட ஓட்டு எங்கே போனது என்று அதிசயித்தனர். '

ஏதோ பெரியதாக வரப்போகிறது. மலையை உருட்டி வந்து தரப் போகிறார்கள் என்று எண்ணினார்கள். மலையை தூக்கி தலையில் வைத்தால் நான் சுமக்கிறேன் என்று சொல்லும் ஏமாற்றுக்காரர்கள் போல ஒரு ஆட்சி அமைத்திருக்கிறது. ஜனநாயக ரீதியாக வந்த ஆட்சியை வன்முறை கொண்டு விரட்டும் ஈன புத்தி திமுகவுக்கு இல்லை. ராஜிவ் கொல்லப்பட்டபோது ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றோம். ஒன்று பத்தாகி நூறாகி அடுத்தடுத்து திமுக ஆட்சி அமைந்தது.

அப்படி வந்த ஆட்சி மீண்டும் தோல்வியுற்றது. இது ஜனநாயகத்தின் விளையாட்டு. அதனால் ஏற்பட்ட விபரீதம் நமக்கு மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களை திமுக மறந்து விட்டது என்று கூறி வெற்றிக்கனியை பறித்தவர்கள் இன்று என்ன செய்கிறார்கள். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிரை காக்கப் போகிறோம் என்று மார்தட்டிய கட்சிகள் என்ன செய்கின்றன. சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவோம் என்றதும் வெற்றி விழா நடத்தி விளம்பரம் தந்தார்கள். நான் அப்போதே கூறினேன். சட்டமன்ற தீர்மானம் மட்டும் போதாது. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி, அதன்பிறகுதான் விடுதலை பெற முடியும் என்றேன்.

திமுக ஆட்சியில் தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இப்படிதான் நான் நிறுத்தி, அவர்கள் உயிர் பிழைத்தார்கள். நாங்கள் கடைபிடித்த விதிமுறைகளை பின்பற்றி (ராஜீவ் கொலையாளிகளின்) 3 பேரின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். ராஜிவ்காந்தியை கொன்றவர்களுக்கு மன்னிப்பா? விடுதலையா? என்றால், குற்றத்துக்காக அவர்கள் 20 ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள்.

ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சிபோல இங்கே நடக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காலை, மாலை, நள்ளிரவு என எதிர்க்கட்சியினரை கைது செய்தோமா? பொய் வழக்கு போட்டோமா? தனிமை சிறையில் அடைத்தோமா? சென்னையில் கைது செய்து பாளையக்கோட்டைக்கு கொண்டு சென்று வதைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என் பொறுப்பில் இருந்த காவல்துறையா இப்படி வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும்.

நாங்கள், மைனாரிட்டி ஆட்சி நடத்தினோம். அந்த மைனாரிட்டி அரசை தட்டிக்கேட்ட கட்சிகளை தோழமை கட்சிகள் ஆக்கினோம். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் மெஜாரிட்டி இடம் தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு நம்பிய தோழமை கட்சிகளை இப்படி மிரட்டலாமா? ஒரு அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுகிறார், அவசர கால மையங்களை கருணாநிதி மூடினார் என்றார். திமுக மந்திரிகளை கயவர்கள் என்றார். கருணாநிதி மீனவர் பிரச்னையை மோதிரம் போல தேவைப்பட்டால் மாட்டிக்கொள்வார் என்றார் ஒரு மந்திரி. நான் போட்டிருக்கும் மோதிரம் அண்ணா போட்ட மோதிரம். அதை கழற்ற மாட்டேன். அதுகூட தெரியவில்லை.

என் ஆட்சியில்தான் மீனவர்கள் கஷ்டப்பட்டார்களாம், இப்போதுகூட மீனவர்கள் தாக்கப்பட்டு, செய்திகள் வருகின்றன. நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை பழித்து பேசினர். இன்று கடிதம் எழுதாமல் தந்தி கொடுக்கிறாரா? எந்த முறையில் மாநில அரசு தொடர்புகொள்ள வேண்டுமோ? அந்த முறையில் தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த நேரமும் கைவிட்டதில்லை. இன்னொரு மந்திரி உதயகுமார், கருணாநிதி உயிர் தூக்கில் போகப் போகிறதா? தூக்கத்தில் போக போகிறதா என்று சட்டமன்றத்தில் கேட்டார். கருணாநிதி உயிர் தூக்கத்தில் போனாலும் தமிழ் தாய் மடியில்தான் போகும். தூக்கில் போனால் திராவிடத்துக்காக போகும்.

நான் உயிரை பற்றி கலைப்படுபவன் அல்ல. கவலைப்பட்டால் கள்ளக்குடி தண்டவாளத்தில், பாளையங்கோட்டை சிறையில் போக்கி இருக்க முடியும். இது, தூக்கத்தில் போகும் உயிர்அல்ல, தமிழன் தமிழனாக வாழ்கிறான். தன்மான உணர்ச்சி பெறுகிறான் என்ற நிலை உருவான பிறகுதான் இந்த உயிர் போகும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி வரவேற்றார். சுப.வீரபாண்டியன் நன்றி தெரிவித்து பேசினார். சற்குணபாண்டியன், பரிதிஇளம்வழுதி, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment