Thursday, October 13, 2011

சில தீய சக்திகளும் சுயநலவாத குழுக்களும் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறியடிப்பது பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் கடமை- கோத்தாபய ராஜபக்ஷ!

Thursday, October 13, 2011
பயங்கரவாதத்தை துவம்சம் செய்த இராணுவ வெற்றியையும், யுத்த முனையில் தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து போராடிய வீரர்களை மறக்கச் செய்யக்கூடிய வகையில் சில தீய சக்திகளும் சுயநலவாத குழுக்களும் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறியடிப்பது பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் கடமை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதத்தை முறியடித்த அரசாங்கத்தின் சாதனையை இழிவுபடுத்தக்கூடிய வகையில் சில தேசத்துரோக சக்திகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன என்று கூறினார்.

நான் எதிரியிடம் சரணடையவில்லை’ என்ற தலைப்பில் சிங்களத்தில் வெளிவந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றினார். இந்தப் புத்தகத்தை இலங்கை விசேட படையணியைச் சேர்ந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் உள்ள குழுக்களும், வேறு சிலரும் இந்தப் பொறுப்பை மறந்து எங்கள் மக்களையும், நாட்டையும் யுத்த வீரர்களையும், யுத்தத்தில் நாம் அடைந்த வெற்றிகளையும், அரசாங்கத்தையும் எங்கள் ஜனாதிபதியையும் இழிவுபடுத்தும் துரோகச் செயலில் ஈடுபட எத்தனிக்கிறார்கள் என்று கூறினார்.

இவ்விதம் போலிப் பிரசாரங்களை செய்பவர்களுக்கு குறுகிய காலத்திற்கு மாத்திரமே நன்மையடைய முடியுமென்றும் கூறினார். ஆயுதப் படையினர் பொதுமக்களை படுகொலை செய்தனரென்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அரசாங்கம் தக்க ஆதாரங்கள் மற்றும் புள்ளி விபரங்களை முன்வைத்து இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டது.

நாம் எவ்வளவுதான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரபூர்வமாக மறுப்புத் தெரிவித்தாலும் இந்த தீய சக்திகள் தொடர்ந்தும் அதே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கின்றன என்று கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகளுக்கு நல்ல வெளிநாட்டு அனுபவம் இருப்பதனால் அவர்கள் இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை தொழில் ரீதியில் சிறப்பாக நிறைவேற்றும் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை பாராட்டும் பல நாடுகளைப் போன்று எங்கள் படைகளை கண்டிப்பவர்களும் மனம் மாறி அவர்களின் நற்பணிகளை பாராட்ட வேண்டுமென்று சொன்னார்.

இலங்கையை ஐக்கியப்படுத்துவதற்காக ஆயுதப்படையினர் ஆற்றிய மாபெரும் சேவையை அரசாங்கம் என்றும் மறந்துவிடாதென்றும், அது போன்று பொதுமக்களும் எமது யுத்த வீரர்களை என்றும் மறந்துவிடலாகாது என்றும் கூறினார்.

இவ் வைபவத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதம தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, வைஸ் எட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்ல, இளைப்பாறிய மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி, விசேட படைப்பிரிவின் தளபதி ஹரேந்திர ரணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment