Monday, October 3, 2011

ரூ.1500 கோடி ராணுவ நில ஊழல் : சிபிஐ விசாரணைக்கு அந்தோணி உத்தரவு!.

Monday, October 03, 2011
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே 200 ஏக்கர் ராணுவ நிலம் சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.1500 கோடி மதிப்புள்ள இந்த நில விற்பனை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் முக்கிய பகுதியில் இந்திய விமானப்படை தளம் மற்றும் 15-வது படைப்பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் சமீபகாலமாக குடியிருப்புகள் முளைத்தன.

இது தொடர்பாக துறை விசாரணை நடத்தியதில் ராணுவத்துக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராணுவத்தினர் வழங்கிய 70-க்கும் அதிகமான ஆட்சேபமின்மை சான்றிதழ் அடிப்படையில் இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1200 கோடி முதல் ரூ.1500 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டு சதியில் ராணுவ உயர் அதிகாரிகள், மாநில உயர் அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் சம்பந்தப்பட்டிருப்பது துறை ரீதியான விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவ எஸ்டேட் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல உயர் அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களது உதவி இல்லாமல் இந்த அளவு ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீநகர் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். கார்கில் வீரர்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்புக்கு ராணுவ நிலம் ஒதுக்கியது, மேற்கு வங்கத்தில் சுக்னா ராணுவ நிலையத்தை ஒட்டிய 70 ஏக்கர் நிலம் சிலிகுரியை சேர்ந்த தொழிலதிபருக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்தது என ஏற்கனவே பல நில ஊழல்கள் ராணுவத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளன. இந்த ஊழல்களை எல்லாம் ஸ்ரீநகர் ராணுவ நில ஊழல் மிஞ்சி விடும் என ராணுவ வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.

No comments:

Post a Comment