Thursday, September 22, 2011

பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்-கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன!

Thursday, September 22, 2011
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பயங்கரவாதத்துக்காக நிதிதிரட்டினால் அவரும் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிதித் தொழில் சட்டமூலம் புதிய சட்டமூலமாக இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி, நிதிக் கம்பனிகள் தொடர்பில் செயற்படுவதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இலங்கையில் 37 நிதிக்கம்பனிகள் உள்ளதோடு, அவற்றின் 376 கிளைகள் நாடு பூராகவும் உள்ளன.

இவற்றின் சொத்துமதிப்பு 234 பில்லியன் ரூபாவாகும்.

போலி நிதிக்கம்பனிகளிடம் மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிராக முழுமையாக சட்டநடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம், அனுமதியின்றி நிதிக் கம்பனிகள் வைப்புக்களைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாக வைப்புக்களைப் பெறுவதற்கு எதிரான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை மேற்கொள்ள உதவுபவர்களும் குற்றவாளிகளாகவே கருதி தண்டிக்கப்படுவர்.

இதுதவிர, நீதிமன்ற உத்தரவுடன் இவற்றின் சொத்துக்களை பரிசோதனை செய்யவும் அத்தகைய அச்சுறுத்தலான நிதிக் கம்பனிகளின் விபரங்களை வெளியிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனிகளின் பணிப்பாளர்களுடைய சொத்து விபரங்களையும் பெற புதிய சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடையும் நிதிக்கம்பனிகளை மீளமைக்கவும், வேறு கம்பனியுடன் கூட்டிணைக்கவோ மத்திய வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மோசடியான நிதிக் கம்பனி பணிப்பாளர்களுக்கு ஐந்து வருடத்துக்குக் குறையாத தண்டனை அல்லது ஐந்து மில்லியனுக்கு குறையாத தண்டனையே வழங்கமுடியும்.

முன்பிருந்த சட்டமூலங்களிலிருந்த குறைபாடுகளை திருத்தி பரிபூரணமான சட்டமாக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதிச்சபைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இலங்கைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் செயற்பட இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலங்களின் பிரகாரம் தராதரம் பாராது சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment