Thursday,September, 29, 2011தர்மபுரி: வாச்சாத்தி பாலியல் வழக்கில் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. வனம், போலீஸ், வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையை சேர்ந்த 154 பேர், காவல் துறையை சேர்ந்த 109 பேர், வருவாய் துறையை சேர்ந்த 6 பேர் என 269 பேர் 1992 ஜூலை 20ம் தேதி அங்கு சென்றனர்.
வீடு வீடாக புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் என 133 பேரை கைது செய்தனர். சோதனையின் போது 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கில் சோதனைக்கு சென்ற 269 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 1995ல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 1996ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் 2008 பிப்ரவரி 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முடிந்தது. செப்டம்பர் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி குமரகுரு அறிவித்தார்.
அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட வனத்துறை ஊழியர்கள் அங்கமுத்து, ராஜானந்தம், ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் 3 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி குமரகுரு தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மூன்று பேரும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (27ம் தேதி) சரண் அடைந்தனர். இதையடுத்து வாச்சாத்தி பாலியல் வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
வாச்சாத்தி வழக்கில் 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள், டிஎஸ்பி, தாசில்தார் உள்பட 269 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 269 பேரில் 54 பேர் இறந்து விட்டனர். 215 பேரே இப்போது உயிருடன் உள்ளனர். வழக்கில் அரசு தரப்பில் 75 பேரும், எதிர் தரப்பில் 3 பேரும் சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். இதையடுத்து 11 மணி அளவில் தீர்ப்பை நீதிபதி குமரகுரு வாசிக்க தொடங்கினார். இதில் ஐஎப்எஸ் அதிகாரிகள் 3 பேரை குற்றவாளியாக அறிவித்தார். முதல் குற்றவாளியாக மண்டல வனப் பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இபிகோ 201வது பிரிவின் கீழ் இவரை குற்றவாளியாகவும் அறிவித்தார். 12.30 மணி அளவில் 126 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து ஒவ்வொருவரின் பெயரையும் நீதிபதி வாசித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் தர்மபுரி டிஎஸ்பி சந்தான பாண்டியன் தலைமையில் அதிரடி படை, ரிசர்வ் போலீசார் உள்பட 100 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். கோர்ட் நுழைவாயிலில் தடுப்பு அமைத்து அனைவரும் சோதனை செய்யப்பட்டனர்.
வீரப்பனுக்கு பிறகு வாச்சாத்தி!
கடந்த 2004ல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய தர்மபுரி மாவட்டமான பாப்பாரப்பட்டிக்கு படை எடுத்தன. அந்த சம்பவத்துக்கு பிறகு தீர்ப்பை கேட்கவும், ஒளிபரப்பு செய்யவும் பிரபல ஆங்கில சேனல்கள் உள்பட தமிழ் சேனல்களும் ஒளிபரப்பு வாகனங்களுடன் தர்மபுரி கோர்ட் வளாகம் முன்பு காத்திருந்தன. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
3 பஸ்சில் வந்த கிராம மக்கள்!
ஒட்டுமொத்த கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வழக்கில், தீர்ப்பை கேட்பதற்காக வாச்சாத்தி மலை கிராம மக்கள் 3 பஸ்களில் கோர்ட்டுக்கு புறப்பட்டனர். இதில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களும், தாக்குதலுக்கு ஆளான ஆண்களும் அடங்குவர். பஸ்சில் ஏறுவதற்கு முன்னதாக பெண்கள், மலை கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கண்ணீர் மல்க சாமி கும்பிட்டனர்.
No comments:
Post a Comment