Tuesday, September 20, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது : அமைச்சர் நாராயணசாமி!

Tuesday, September 20, 2011
மீனம்பாக்கம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். கூடங்குளத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை அவர் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின்பேரில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களை சந்திக்கப் போகிறீர்களா?

ஆம், அதற்காகத்தான் வந்துள்ளேன். கூடங்குளத்தில் போராட்டம் நடத்திவரும் மக்களை நேரடியாக சந்தித்து அணுமின் நிலையத்துக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெளிவாக கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ஏற்று வந்திருக்கிறேன். இன்று தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து இதுதொடர்பாக பேச உள்ளேன். நாளை முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன்.
மக்கள் போராட் டம் காரணமாக அணுமின் நிலைய பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இதுதொடர்பாக தமிழக அரசு, பிரதமரிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் செய்ய முடியாது. மக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறபோது அணுமின் நிலையம் அமைப்பது சரியா? நாடு முழுவதும் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் நல்லமுறையில் செயல்படுகின்றன. அணுமின் நிலையங்களுக்கு சர்வதேச தரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணுமின் நிலையங்களால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. அணுமின் நிலையங்களில் மின் உற்பத்தி நல்லமுறையில் நடந்து வருகிறது.

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணுமின் நிலையம் வெடித்து பலர் உயிரிழந்தனர். அந்த நிலைமை இங்கு ஏற்படாதா?

ஜப்பானை நினைத்து மக்கள் பயப்படுவது உண்மைதான். நம் நாட்டில் அந்த நிலைமை இல்லை. ஏற்கனவே சுனாமி பேரழிவின்போதுகூட, கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதேபோலத்தான் அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரிடையாக பார்வையிட்டு கண்காணிக்கின்றனர். எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பின்னர் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற நாராயணசாமியை தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் நாராயணசாமி கூறும்போது, இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்து பேசுகிறேன். நாளை முதல்வரை சந்திப்பேன் என்றார்.

No comments:

Post a Comment